தமிழ்க்கைதிகளின் விடுதலையினை வலுயுறுத்தி கோண்டாவில் தொடருந்து வழித்தடத்தில் தொடருந்து முன் பாய்ந்து தன்னை மாய்த்துக் கொண்ட மாணவன் இராஜேஸ்வரன் செந்தூரனது சம்பவத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்கள் அமைச்சர் சுதன்ராஜ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
மாவீரர்களை நினைவேந்தி நிற்கும் இந்நாட்களில் சிறிலங்காவின் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்க்கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி தனது உயிரை மாய்த்துக் கொண்ட மாணவனின் சம்பவம் எம்மையெல்லாம் பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது.
தமிழீழ தாயகத்தின் கோப்பாயைச் சேர்ந்த அகவை 18க் கொண்ட இராஜேஸ்வரன் செந்தூரன் எனும் கொக்குவில் இந்துக் கல்லூரியில் கலைப்பிரிவு மாணவன், கோண்டாவில் தொடருந்து வழித்தடத்தில் தொடருந்து முன் பாய்ந்து தன்னை மாய்த்துக் கொண்ட செய்தி பேரதிர்ச்சியாகவுள்ளது.
சிறிலங்காவின் சிறைகளில் தொடர்ந்தும் எவ்வித அடிப்படையுமின்றி தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க்கைதிகளின் விடுதலை என்பது நீடித்து வரும் இழுபறி நிலையாக உள்ளது.
இவர்களது விடுதலைக்காய் தமிழர் தாயகத்திலும் புலத்திலும் ஓங்கி ஒலிக்கும் குரல்களின் உச்சமாய் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட மாணவனுக்கு மரியாதை வணக்கத்தினை தெரிவித்துக் கொள்ளும் இவ்வேளை, துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுபதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவ்வாறன துயரச் சம்பவங்கள தொடராது இருக்க, தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க்கைதிகளை போர்கைதிகளாக பகிரங்கமாக அறிவித்து , அவர்களது விடுதலைக்கு சிறிலங்கா மீதான அழுத்தங்களை பிரயோகிக்க , இலங்கைத்தீவின் யுத்த காலத்தில் இணக்கப்பாட்டாளர்களாக இருந்த இணைத் தலைமை நாடுளுக்கும் (அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான்) , ஐ.நா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் அல் ஹசைன் அவர்களையும் மீளவும் வேண்டி நிற்கின்றோம்.
இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்களுக்கான அமைச்சர் சுதன்ராஜ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.