முன்னைய ஆட்சிக்கும் தற்போதைய ஆட்சிக்கும் என்ன வித்தியாசம் உள்ளது என்பது எமக்கு தெரியவில்லை. குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கம் நினைத்திருந்தால் காத்திரமான நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம். ஆனால் ஒரு கையால் கொடுத்து மறுகையால் பறித்துக் கொள்வதை ஒத்ததாக, சில அரசியல் கைதிகளை 10 லட்சம் ரூபா பிணையில் விடுவித்தது எமக்கு மனவேதனையளிக்கின்றது என வடக்கு முதல்வர் சி.வி விக்கினேஸ்வரன் நோர்வே தூதுவரிடம் எடுத்துரைத்தார்.
இலங்கைக்கான நோர்வே தூதுவர் தோர்ப்ஜோன் கோஸ்றட்சீதர் தலைமையிலான குழுவினர் நேற்றைய தினம் யாழ்.குடாநாட்டுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடினர்.
குறித்த சந்திப்பு நேற்றைய தினம் மாலை 5மணி தொடக்கம் மாலை 6.30 மணி வரையில் நடைபெற்றிருந்தது. குறித்த சந்திப்பு தொடர்பாக முதலமைச்சர் சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
இன்றைய சந்திப்பில் நோர்வே தூதுவர் எங்களிடம் கேட்டிருந்தார். குறிப்பாக இலங்கையில் ஒரு ஆட்சிமாற்றம் உருவாகியிருக்கும் நிலையில் புதிய ஆட்சியாளர்களுடன் இணைந்து செயற்படுமாறு. அதற்கு நாம் பதிலளிக்கையில் புதிய அரசாங்கத்தை அமைப்பதில் வடகிழக்கு தமிழ் மக்கள் பங்காளிகளாக செயற்பட்டிருந்தார்கள்.
நாம் அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் அல்ல. அவர்கள் செய்யவேண்டிய கடமைகளை செய்யவில்லை. என்பதையே நாங்கள் கூறுகின்றோம்.மேலும் நல்லிணக்கம் என பேசிக் கொண்டிருப்பதில் பயனில்லை. நல்லிணக்கத்தை அரசாங்கம் செயலில் காண்பிக்கவேண்டும். என்பதை சுட்டிக்காட்டியிருந்தேன். அதற்கு தூதுவர் மீண்டும் கிடைத்துள்ள ஜனநாயக சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள் என கூறியதுடன் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு தடையாக இருக்காதீர்கள் எனவும் கூறினார்.
நான் அதற்கு மீண்டும் பதிலளித்தபோது,
நாம் அரசாங்கத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கவில்லை. எமது சுமுகமான வாழ்வுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் விடயங்களை அரசாங்கத்திற்கு கூறிக்கொண்டிருக்கிறோம்.
ஆனால் அரசாங்கம் அந்த முட்டுக்கட்டைகள் தொடர்பாக கவனத்தில் எடுக்க வில்லை. என்பதை சுட்டிக்காட்டியிருந்தேன் என முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.