நீர், மின்சாரம், தொலைபேசிக் கட்டணங்கள் அதிகரிக்காது!

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனை ஊடாக பெறுமதி சேர் வரி (VAT) மூன்று பிரிவுகளாக்கப்பட்டுள்ளமையால், பெரும்பாலான அத்தியவசியப் பொருட்களுக்கான விலை குறைவடைந்துள்ளதாகவும், அதேபோல் நீர் மற்றும் மின்சாரத்திற்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படாது எனவும் நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பெறுமதி சேர் வரி இதுவரை 11% ஆக இருந்ததோடு, இம்முறை வரவு செலவுத் திட்ட யோசனைகளின் படி, 0%, 12.5% மற்றும் 8%மாக பிரிக்கப்பட்டுள்ளது.

தொகை மற்றும் சில்லரை வர்த்தகத்தில் முழுமையாக பெறுமதி சேர் வரி விலக்களிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அரசாங்கத்தின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வரும், மின்சாரம், நீர் மற்றும் தொலைத் தொடர்பு ஆகிய சேவைகளுக்கான பெறுமதி சேர் வரிகளும் நீக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால் இந்த சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சு மேலும் கூறியுள்ளது.

இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் மற்றும் தேசிய உற்பத்திப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 11% வெட் வரி வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக 8%மாக குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி இறக்குமதிப் பொருட்களுக்கான விலை விரைவில் குறைவடையும் எனவும் நிதியமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

Related Posts