கிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் வைத்தியசாலைக்கு அருகில் நீண்ட காலமாக உரிய அனுமதிப் பத்திரங்களின்றி அரச காணிகளில் குடியிருந்து வந்த 7 குடும்பங்களை அந்தக் காணிகளில் இருந்து வெளியேற்றுமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.
அரசுக்குச் சொந்தமான காணிகளில் இந்தக் குடும்பங்கள் அடாத்தாகக் குடியேறியிருப்பதாகத் தெரிவித்து, அரச காணிகள் மீளப் பறித்தல் சட்டத்தின் கீழ், அந்தக் குடும்பங்களை வெளியேற்றுவதற்கு உத்தரவு பிறப்பிக்குமாற கிளிநொச்சி நீதிமன்றத்தில் அரச அதிகாரிகளினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் செய்யப்பட்டிருந்த மீளாய்வு மனு மீதான வழக்கிலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தர்மபுரம் வைத்தியசாலைக்கு அருகில் வைத்தியசாலையின் விஸ்தரிப்புக்கென பயன்படுத்தாமல் இருந்த காணிகளிலேயே இந்த 7 குடும்பங்களும் அடாத்தாகக் குடியிருந்ததாகத் அரச தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. அந்தக் காணிகள் அரச வைத்தியசாலையை விஸ்தரிப்பதற்காகத் தேவைப்படுவதன் காரணமாகவே அவற்றில் குடியிருந்தவர்களை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் அரச காணிகள் மீளப் பறித்தல் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரணை செய்த நீதவான், அந்தக் குடும்பங்களை வெளியேற்றுவதற்கான உத்தரவைப் பிறப்பித்திருந்தார். எனினும் தாங்கள் நீண்டகாலமாக அந்தக் காணிகளில் தாங்கள் குடியிருந்த வருவதாகவும், எனவே அந்தக் காணிகள் தங்களுக்கே சொந்தமானவை என்றும் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் வழங்கிய வெளியேற்ற உத்தரவை எதிர்த்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் மீளாய்வு மனு ஒன்றை இந்த 7 குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிபதி, இந்தக் காணிகளில் குடியிருப்பதற்குரிய அனுமதிப் பத்திரங்கள் எதுவும் பெற்றிருக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, கிளிநொச்சி நீதிமன்றம் வழங்கியுள் தீர்ப்பை உறுதிப்படுத்தி, அந்தக் குடும்பங்களை அந்தக் காணிகளில் இருநது வெளியேற்றுமாறு உத்தரவு பிறப்பித்தார்.
இந்த வழக்கில் வழங்கிய தீர்ப்பில் நீதிபதி இளஞ்செழியன் மேலும் தெரிவித்துள்ளதாவது:
அரச காணிகள் அரசுக்குச் சொந்தமானவை. அரச காணிகளில் குடியிருப்பவர்கள், அங்கு குடியிருப்பதற்கென அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரம் வைத்திருக்க வேண்டும். அரச காணிகள் மீளப்பறித்தல் சட்டமானது, அரச காணிகளில் அடாத்தாகக் குடியிருப்பவர்களைத் தடுத்து, அரச காணிகளைப் பாதுகாப்பதற்காகவே நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது, அரச அனுமதிப்பத்திரம் இல்லாமல் எவரும் அத்துமீறி அரச காணிகளில் குடியிருந்தால், அவ்வாறு குடியிருப்பதற்கு, அரசினால் வழங்கப்பட்ட சட்டரீதியான அனுமதிப்பத்திரம் ஏதாவது இருக்கின்றதா, என்ற ஒரேயொரு கேள்வியையே நீதிமன்றம் அங்கு குடியிருப்பவர்களிடம் கேட்கும்.
இத்தகைய காணிகளில் குடியிருப்பதற்கு அரசாங்கத்தின் அனுமதி பெற்றிருக்கின்றீர்களா, அதனை நிரூபிப்பதற்கு ஏதாவது அரசு சம்பந்தபட்ட கடிதங்கள் அல்லது ஆவணங்கள் இருக்கின்றதா என்றும் நீதிமன்றம் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை செய்யும். அத்தகைய ஆவணங்கள் எதுவும் இல்லையாயின், அந்தக் காணிகளில் அடாத்தாகக் குடியிருப்பவர்களை காணிகளில் இருந்து வெளியேற்ற வேண்டியது நீதிமன்றத்தின் கடமையாகும்.
வழக்கில் சம்பந்தப்பட்ட மனுதாரர்களிடமிருந்து, அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட எந்தவொரு அனுமதிப்பத்திரமும் சமர்ப்பிக்கப்படவில்லை. கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் மட்டுமல்ல. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற விசாரணையின்போதும்கூட, இத்தகைய ஆவணங்கள்எ எதுவும் முன்வைக்கப்படவில்லை. எனவே, கிளிநொச்சி நீதவானின் தீர்ப்பு சரியானது என உறுதிப்படுத்தி குறிக்கப்பட்ட 7 மனுதாரர்களையும் அரச காணிகளில் இருந்து வெளியேற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிடுகின்றது என அந்தத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.