தமிழர் தாயக விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்தியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் நேற்று நாடாளுமன்றில் நடைபெற்றுவரும் வரவு – செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றும் போதே மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
தமிழ் மக்கள் இவ்வாரம் தமது உயிர்நீத்த மாவீரர்களுக்கு – தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளதால் அதற்கான அனுமதியை அரசு வழங்க வேண்டும் என்று கடந்த சனிக்கிழமை நாடாளுமன்றில் உரையாற்றும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியிருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
தமிழருக்கான விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும், மாவீரர் வாரம் கடந்த 21ஆம் திகதி ஆரம்பமாகியது. எதிர்வரும் 27ஆம் திகதி வரை மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.