கிளிநொச்சி மாவட்டத்தில் இந்திய வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுப்பதில் பயனாளிகள் அதிகாரிகளின் முறைக்கேடுகளுக்கும், உதாசீனங்களுக்கும் ஆளாகிவருவதாக முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன.எனவே, இவ் விடயம் தொடர்பில் உரிய தரப்பினரின் கவனத்திற்குக் கொண்டு வருவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
இவ் விடயம் குறித்து டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
இந்திய வீட்டுத் திட்டமானது எனது சமயோசகித செயற்பாடு காரணமாக எமது மக்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகும்.
இதனை உரிய பயனாளிகள் இனங்காணப்பட்டு அவர்கள் வசம் ஒப்படைப்பதில் எவ்விதத் தடைகளும் இருக்கக் கூடாது.
எனினும், இந்திய வீடமைப்புத் திட்டத்தை செயற்படுத்துவதில் பல்வேறு முறைகேடுகள் ஏற்பட்டு வருவதாக அறியக் கிடைத்து வருகிறது.
குறிப்பாக, கிளிநொச்சி மாவட்டத்தில் முழங்காவில் பகுதியில் இவ் விடயம் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன.
இந்திய வீடமைப்புத் திட்டத்தை செயற்படுத்தி வருகின்ற பங்காளித் தரப்பு அதிகாரிகளின் முறைகேடுகள் அதிகரித்து வருவதாக இம் முறைப்பாடுகளில் இருந்து தெரிய வருகின்றது.
பாலியல் இலஞ்சம் கோருதல், உதவித் தொகையினை வழங்குவதில் இழுத்தடிப்பு, வீடுகளுக்கென ஒதுக்கப்பட்ட முழுத் தொகையை வழங்காமல் குறைவான தொகையை பயனாளிகளுக்கு வழங்குதல் போன்ற குற்றச்சாட்டுக்கள் மேற்படி பங்காளித் தரப்பினருக்கு எதிராக எழுந்துள்ளன.
இந்த விடயம் தொடர்பில் இந்தியத் தூதரகத்தின் அவதானத்திற்குக் கொண்டு வரவுள்ளாதாகத் தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா அவர்கள், குறித்த அதிகாரிகள் தொடர்பில் உரிய விசாரணைகளை உடனடியாக மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவும், இது போன்ற தவறுகள் மேலும் இடம்பெறாதிருக்கும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்கும்படியும் கோரிக்கை விடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.