தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்தமை மற்றும் தடைசெய்யப்பட்ட நபர்கள், அமைப்புகள் மீதான தடையை நீக்கியமை போன்ற காரணிகளால் வடக்கு கிழக்கில் புலிக்கொடி ஏற்றப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஹக்மன லொல்பே ரஜமஹா விஹாரையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்-
‘தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களை விசாரணைகள் இன்றி இந்த அரசாங்கம் விடுதலை செய்துள்ளது. இலங்கைக்கு எதிராக பிரிவினைவாதத்தை தூண்டிய அமைப்புக்களுக்கான தடையும் நீக்கப்பட்டுள்ளது.
இந்த வாரம் மாவீரர் வாரமாகும். இது குறித்து ஏற்கனவே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இது பலருக்கு நினைவில் இல்லை. இந்த அச்சத்தை நாமே இல்லாமல் செய்திருந்தோம். மனைவி, பிள்ளை, கணவன் ஒன்றாக பஸ்ஸில் செல்லாத ஓர் காலம் காணப்பட்டது.
இந்த வாரத்தில் ஒட்டுமொத்த நாட்டினதும் தேசியப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. ஈழக்கொடியை ஏற்ற நாம் அனுமதிக்கவில்லை. அவ்வாறான ஓர் நிலைமையை ஏற்படுத்த முடிந்தமைக்காக நாம் மகிழ்ச்சி அடைகின்றோம். இந்த விடயங்கள் மறந்து போவதுகூட மகிழ்ச்சியான விடயம்தான்.
கடந்த அரசாங்கத்தின் பாதுகாப்புச் செயலாளர் தடை செய்திருந்த அமைப்புக்களை தற்போதைய பாதுகாப்புச் செயலாளர் தடை நீக்கியுள்ளார். இது நாட்டிற்கு பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது’ என்றார்.