தமிழுக்காகவும், தமிழ் உணர்வுக்காகவும் மீண்டும் சினிமாவில் நடிக்கிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது இளைய மகன் சண்முகபாண்டியனுடன் இணைந்து “தமிழன் என்று சொல்’ என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு தொடக்க விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், விஜயகாந்த் பேசியது:
அரசியல் பிரவேசத்துக்குப் பின்னர் சினிமாவில் நடிக்கக் கூடாது என்று பிடிவாதமாக இருந்தேன். சண்முகபாண்டியன் நடித்து வருவதால், அவருக்காக எனது மனைவி பிரேமலதாவும், மூத்த மகன் விஜய் பிரபாகரும் பல கதைகளைக் கேட்டு வந்தனர். அப்போது நானும் இந்தக் கதையைக் கேட்டேன். அரசியலில் பல பணிகள் என்று சொல்லி விலகியபோதும், என் மூத்த மகன் விஜய் பிரபாகர் கேட்டுக் கொண்டதால் நடிக்க வந்தேன்.
சண்முக பாண்டியனுக்காக இந்தப் படத்தில் நடிக்கவில்லை. இது என் மொழி படம். தமிழுக்காகவும், இந்தக் கதையில் இருந்த தமிழ் உணர்வுக்காகவும் மீண்டும் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். பல தொழில்நுட்பக் கலைஞர்கள் அறிமுகமாக உள்ளனர்.
ரசிகர்களுக்குத்தான் அவர்கள் புதியவர்கள். எனக்கு நன்கு அறிமுகமானவர்கள். 35 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் இருக்கிறேன். எல்லோரையும் நான் தெரிந்து வைத்திருக்கிறேன். இது மாறுபட்ட படமாக இருக்கும். எழுச்சியான படமாகவும் இருக்கும் என்றார்.
விழாவில் பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக இளைஞரணிச் செயலாளர் எல்.கே.சுதீஷ், தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் அமைப்பின் மாநிலப் பொதுச்செயலர் ஆர்.ஆர்.கோபால்ஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.