தாடியுடன் வீதியில் நடந்து சென்ற இரு இளைஞர்களை கைது செய்து மானிப்பாய் பொலிசார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவின் மகன் மற்றும் அவரது நண்பர் ஆகிய இரு இளைஞர்களுமே கைது செய்யப்பட்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவிக்கையில்-
நேற்று முன்தினம் பகல் 12 மணியளவில் எனது மகன் உட்பட இரு இளைஞர்கள் மானிப்பாய் பகுதிக்கு தமது சொந்த அலுவல் காரணமாக சென்று இருந்தனர். நவாலி முருக மூர்த்தி ஆலயத்திற்கு அருகில் வைத்து அவர்கள் இருவரையும் மானிப்பாய் பொலிசார் கைது செய்து தமது வாகனத்தில் ஏற்றி பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர். அங்கு எனது மகனின் நண்பர் எதற்காக எம்மை கைது செய்தீர்கள் என்று கேட்டதற்கு ஆறு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சேர்ந்து அவரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.
பிளாஸ்ரிக் குழாய்க்குள் மண்ணினை இட்டு அதனால் தாக்கியுள்ளனர். மாலை 5 மணிக்கு நான் அவரை பொலிஸ் நிலையத்தில் பார்த்த போது அவரின் தலையில் பெரிய வீக்கம் இருந்தது. அந்தளவுக்கு பொலிசார் தலையில் கூட மிக மோசமாக தாக்கியுள்ளனர். அங்குள்ள அதிகாரியை கேட்டேன் எதற்காக இவர்களை கைது செய்துள்ளீர்கள் என, சந்தேகத்தின் பேரில் கைது செய்தோம் என்றார்.
யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் வீதியில் நடந்து சென்றால் பொலிசார் சந்தேகத்தின் பேரில் என கைது செய்ய முடியுமா ? அவசரகால சட்டம் இருக்கின்றதா ? என்ன அடிப்படையில் கைது செய்தீர்கள் என கேட்டேன். அவர்கள் தாடி வளர்த்து இருக்கிறார்கள். அதனால் எமக்கு அவர்கள் மீது சந்தேகம் வந்தது என கூறினார்.
அவர்கள் கந்த சஷ்டி விரதம் இருந்தவர்கள் விரத காலத்தில் தலைமுடி வெட்டுவதோ சேவ் எடுப்பதோ இல்லை என அவருக்கு விளங்க படுத்தினேன். நண்பகல் 12 மணிக்கு வீதியால் நடந்து சென்ற குற்றத்திற்காக இரு இளைஞர்களை பொலிசார் கைது செய்து தாக்கி உள்ளனர். அத்துடன் எந்த விதமான முறைப்பாடும் அவர்கள் மீது பொலிசார் எழுதவில்லை.மனித உரிமை மீறப்பட்டு உள்ளது.
நண்பகல் 12 மணிக்கு கைது செய்யப்பட்டவர்களை சுமார் எட்டு மணித்தியாலங்கள் தடுத்து வைத்து இருந்து இரவு எட்டு மணிக்கு தான் எனது மகனையும் அவரது நண்பரையும் பொலிசார் விடுவித்தனர் அதுவரை எந்தவிதமான முறைப்படும் எழுதவில்லை. சந்தேகம் எனும் பெயரில் இருவரையும் கைது செய்து தாக்குதல் நடத்தியமை தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிய படுத்தினேன்.
அவர்கள் அது தொடர்பில் முறைப்பாட்டினை தம்மிடம் தருமாறு கோரியுள்ளனர். முறைப்பாட்டினை கொடுக்க வுள்ளேன்.அந்த முறைப்பாட்டுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் இந்த விடயத்தை அணைந்து மேல் மட்டத்திற்கும் எடுத்து செல்வேன். வடமாகாண எதிர்கட்சி தலைவர் என்பதாலும் சிங்களம் தெரியும் என்பதாலும் என்னால் எனது மகனுக்காக கதைக்க முடிந்தது இதுவே ஒரு சாதாரண குடும்ப பின்னணியினை கொண்ட இளைஞர்களுக்கு நடந்து இருந்தால் பொலிசாரை கேள்வி கேட்டு இருக்க முடியாது.
எனவே இந்த சம்பவத்தை சாதாரண சம்பவமாக விடாது இதற்கு உரிய நடவடிக்கையினை பொலிஸ் உயர் அதிகாரிகள் எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.