தேசிய அரசினால் முன்வைக்கப்பட்டுள்ள கன்னி வரவு – செலவு திட்டத்தின் மூலம் அவர்களது பொருளாதாரக் கொள்கை தெளிவாகியுள்ளதுடன், தனியார் துறையை நோக்கிச் செல்லும் இப்பயணமானது நாட்டின் எதிர்காலத்துக்குப் பெரும் பாதிப்பாக அமையும் என்று மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
மக்களுக்குச் சலுகைகளை வழங்கும் போர்வையில் பல முக்கிய சலுகைகளை இல்லாது ஒழிக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
நேற்று நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் வரவு – செலவுத் திட்டம் சமர்பிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த் அரச தரப்பினர் பழைய விடயங்களைக் குறிப்பிட்டு குறிப்பிட்டு தமது தவறுகளை சரிசெய்யப் பார்க்கின்றனர். கடந்த ஆட்சியில் ஏற்பட்ட தவறுகளை சுட்டிக்காட்டாது தமது நடவடிக்கைகளை இவர்க்க்ள முன்னெடுக்க வேண்டும்.
இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் விவசாயிகளின் நிலையான நெல் விலை இல்லாது செய்யப்பட்டுள்ளது. அரச தொழில்களில் புதிதாக இணைபவர்களது ஓய்வூதியம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. நாட்டை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு செல்லவே இவர்கள் முயற்சிக்கிறார்கள் என்றே என்னால் உணர முடியும்” – என்றார்.
வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச கருத்துத் தெரிவிக்கையில், “மக்களுக்கு சலுகைகள் வழங்கும் வகையில் இம்முறை வரவு – செலவுத்திட்டம் அமைந்திருந்தாலும் அதன் உண்மைத்தன்மை அதற்கு மாற்றமானதாகும். அரச பாடசாலை மாணவர்களுக்கு வழங்கிய பல சலுகைகளை இல்லாது செய்யும் அபாயம் உள்ளது.
அதுமட்டுமல்லாது, விவசாயிகளுக்கான சலுகைகள் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளன. அரச துறையிலிருந்து தனியார்துறை நோக்கியதாக அரசின் பொருளாதாரக் கொள்கை அமைந்துள்ளது. வரவு – செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும்போது அதன் பாரதூரம் மக்கள் உணராத வகையில் அமைந்திருந்தது.
இது தொடர்பில் நாங்கள் மேலும் ஆராய வேண்டியுள்ளது. அதன் பின்னரே எமது நிலைப்பாட்டைத் தெளிவாகக் கூற முடியும்” – என்றார்.