தமிழ் மக்களின் சுபீட்சமான எதிர்காலத்திற்காக நேர்மையாகவும் நீதியாகவும் பற்றுறுதியோடு செயற்படும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் அனைத்து நடவடிக்கைகளிற்கும் தமிழர் விடுதலை கூட்டணி தனது பூரண ஆதரவை வழங்கும் என அக்கட்சியின் ஊடக பேச்சாளர் நாகேந்திரன் டர்ஷன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில்,
தமிழ் மக்களின் பிரச்சனைகளிற்கு ஒரு தீர்க்கமான முடிவை எட்டுவதற்காக பல்வேறு தரப்பினூடாக முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில் சிலர் தமது அற்ப சொற்ப ஆசைகளிற்காக மக்களின் எதிர்காலத்தை தாரை வார்க்கும் நிலையில் உள்ளனர்.
இவ்வேளையில், வட மாகாண முதலமைச்சர் நேர்மையாகவும் நீதியாகவும் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளிற்கும் தமிழர் விடுதலை கூட்டணி தமது பூரண ஆதரவை வழங்கும்.
தமிழர் விடுதலை கூட்டணி எப்போதும் தமிழர் நலன் சார்ந்த விடயங்களிலும் சுபீட்சமான எதிர்காலதிற்குமாக எப்போதும் பாடுபடும் என்பதோடு அதற்காக நீதியாகவும் நேர்மையாகவும் செயற்படுபவர்களோடு கைகோர்த்து செயற்பட என்றும் தயாராகவே இருக்கின்றது.
அது மட்டுமல்லாது, தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் கூட ஒரு சுமுகமான முடிவினை எட்டுவதற்காக என்றென்றும் பாடுபடும் என்பதனை தெரிவித்துகொள்ள விரும்புகின்றோம்.
சிறைகளில் வாடும் எத்தனையோ இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களின் குடும்ப நிலையினை கருத்தில் கொண்டு நேர்மையாகவும் நீதியாகவும் அவர்களின் விடுதலைக்காக அனைத்து தரப்பினரும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் சிலர் அந்த நடவடிக்கைகளிற்கு முட்டு கட்டையாக தொழிற்பட விளைகின்றனர்.
இந்த நிலையில் நீதியாகவும் நேர்மையாகவும் மக்களின் சுபீட்சமான எதிர்காலத்திற்காக பாடுபடும் வட மாகாண கௌரவ முதலமைச்சர் அவர்களின் நடவடிக்கைகளிற்காக தமிழர் விடுதலை கூட்டணி தமது பூரண ஆதரவை வழங்கும் -என்றிருந்தது.