யாழ் மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் நெற்செய்கைக்கான உரங்களை (யூரியா, சுப்பர் பொசுபரசு (TSP), மியூரேற் பொட்டாசு (MOP), விவசாயிகள் நிர்ணய விலையை விட அதிக விலைக்கு கொள்வனவு செய்யும் நிலை ஏற்படின் அது தொடர்பான முறைப்பாட்டினை மாவட்ட செயலகத்திற்கு அறியத்தருமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து கமநல சேவைகள் நிலையங்களூடாகவும் நெற்செய்கைக்கான மானிய உரவகைகளான யூரியா, சுப்பர் பொசுபரசு (TSP), மியூரேற் பொட்டாசு (MOP), என்பன தனிப்பசளையாக ஒரு அந்தர் (50Kg) காப்புறுதிப்பணம் ரூபா. 150.00 உள்ளடங்கலாக ரூபா 500.00 இற்கு வழங்கப்படுகின்றது.
அத்துடன் ஏனைய பயிர்களிற்கான மேற்குறிப்பிட்ட உரவகைகள் தனிப்பசளையாக ஒரு அந்தர் (50Kg) நிர்ணய விலையான ரூபா. 1200.00 இற்கு சகல கமநல சேவைகள் நிலையங்களிலும் விற்பனை செய்யப்படுகின்றது.
அவ்வாறே தனியார் கடைகளிலும் தனிப்பசளையாக ஒரு அந்தர் (50Kg) ரூபா 1200.00 இற்கு விற்பனை செய்யப்பட வேண்டும். இருப்பினும் நிர்ணய விலையான ரூபா 1200.00 ஐ விட அதிகமான விலைக்கு தனியார் கடைகளில் விவசாயிகள் கொள்வனவு செய்ய நேரிடின் அது தொடர்பான முறைப்பாட்டினை எமக்கு அறியத்தாருங்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.