Ad Widget

ஜனாதிபதியும் பிரதமரும் நடவடிக்கை எடுப்பார்கள்: பிணையில் வந்த கைதி நம்பிக்கை

தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய ஜனாதிபதியும் பிரதமரும் நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை தாங்கள் பூரணமாக நம்புவதாக பிணையில் விடுவிக்கப்பட்ட அரசியல் கைதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஊறணியை சேர்ந்த அழகையா சுதாகரன் என்பவர் மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டு மட்டக்களப்பிலுள்ள தனது வீட்டுக்கு வந்துள்ளார்.

அவரை கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் சந்தித்து கலந்துரையாடியதுடன் அவரின் நிலைமை தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.

698193714Untitled-1

இதன்போது கருத்து தெரிவித்த அ.சுதாகரன்,

சிறைச்சாலையில் நாங்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வந்தோம். எமது குடும்பங்களை பிரிந்து அந்த வேதனைகளை நாங்கள் அனுபவித்து வந்தோம். இந்த நிலையில் எங்களை விடுதலை செய்ய நடவடிக்கையெடுத்த ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

எங்களைப் போன்று ஏனையவர்களையும் விடுதலை செய்ய ஜனாதிபதியும் பிரதமரும் நடவடிக்கையெடுப்பார்கள் என்பது எமது பூரண நம்பிக்கையாகும். அந்த நம்பிக்கையில் எங்களுக்குள் எந்த மாற்றமும் இல்லை.

தொடர்ச்சியாக உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொண்டுவரும் சக அரசியல் கைதிகளின் நிலைமையினை கருத்தில்கொண்டு விரைவில் அவர்களின் விடுதலை தொடர்பில் நடவடிக்கையெடுப்பார்கள் என நம்புகின்றோம்.

இன்று நாங்கள் சிறைச்சாலையில் இருந்துவந்துள்ளோம். இன்று எமது குடும்பத்தினை எவ்வாறு கொண்டுசெல்வது என்பது தொடர்பில் ஏதும் புரியாத நிலையிலேயே இருந்து வருகின்றோம்.

எமது குடும்பத்தினைக் கொண்டு நடத்தவும் எதிர்வரும் காலங்களில் எமக்கான வழக்குகளுக்கு சமூகமளிக்கவும் எமக்கு எந்தவிதமான வருமானமும் இல்லாத நிலையே இருந்துவருகின்றது.

எனக்கு ஒரு மகன் இருக்கின்றார். அவரின் கல்வி மற்றும் அவரின் தேவைகள் தொடர்பிலும் நான் பெரும் கரிசனையில் இருந்து வருகின்றேன். எனது குடும்பத்தினை கவனிக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது.

அதற்கான வருமானத்தினைப் பெறுவதற்கு சுயதொழிலை மேற்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். சமூக உணர்வு சார்ந்தவர்கள், பொது அமைப்புகள் எனக்கு உதவ முன்வந்தால் அதனை இந்த வேளையில் செய்யும் பெரும் உதவியாக நோக்குவேன் என்று தெரிவித்தார்.

அத்துடன் தமிழ் அரசியல் கைதிகளுக்கு கிழக்கு மாகாணசபை ஊடாக வாழ்வாதார உதவித் திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக, இதன்போது கருத்து வௌியிட்ட அம் மாகாண சபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர்,

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் விடுதலைக்கான நடவடிக்கையினை எடுத்துள்ள இந்த நாட்டின் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

விடுதலை செய்யப்பட்டு மட்டக்களப்பு வரும் தமிழ் அரசியல் கைதிகளின் எதிர்காலத்திற்காக அவர்களுக்கு கிழக்கு மாகாணசபை ஊடாக சுயதொழில் நிதிகளை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தினை ஊக்குவிப்பதற்கான என்னால் முடிந்த உதவிகளை செய்யவுள்ளேன்.

அதேநேரம் இந்த நாட்டின் ஜனாதிபதி சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கையினை எடுக்க வேண்டும், என அவர் கூறியுள்ளார்.

Related Posts