Ad Widget

எட்டு அரசியல் கைதிகள் பிணையில் விடுதலை!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 8 தமிழ் அரசியல் கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

10 லட்சம் ரூபா பெறுமதியிலான இரண்டு சரீர பிணைகளின் கீழ் இவர்கள் கடும் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கிராம உத்தியோகத்தரின் பதிவு சான்றிதழ் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பித்த நீதவான், இவர்களுக்கு வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்றைய வழக்கில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிரந்தர முகவரியில், ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் அறிவிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 31 அரசியல் கைதிகளுக்கு இவ்வாறு பிணை வழங்கப்பட்டிருந்தது. இவர்களில் 24 பேர்பிணை ஒப்பந்தங்கள் பூர்த்தியான நிலையில் சிறைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதன்படி மொத்தமாக 39 அரசியல் கைதிகளுக்கு இதுவரை பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் இன்று பிணையில் விடுவிக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி ஏலவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts