இலங்கை சிறைச்சாலைகளில் கடந்த 9 தினங்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்ற தமிழ் கைதிகளின் விடுதலை குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோர் எதிர்வரும் 17ம் திகதி கூடி பேச்சு நடத்தி முடிவெடுக்கவுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று மாலை நடைபெற்ற கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியிருக்கின்றார்.
வவுனியா சுவர்க்கா விடுதியில் மாவை சேனாதிராஜாவின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிவடைந்ததன் பின்னர், செய்தியாளர்களிடம் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அவர் தகவல் வெளியிட்டார்.
செவ்வாய்க்கிமை நடைபெறும் முக்கிய கூட்டத்திற்கு முன்னதாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ளேயும் வெளியேயும் உள்ள பொது அமைப்புக்களுடனும் கைதிகளின் விடுதலைக்காக ஜனநாயக வழிமுறையில் எடுக்கப்பட வேண்டிய வழிமுறைகள் பற்றி கலந்தாலோசிக்கப்படும் என்றும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமிழ்க் கைதிகளின் விடுதலைக்காக இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளுடனும் பேச்சு நடத்தவுள்ளதாகவும் மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், டாக்டர் சிவமோகன், வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சத்தியலிங்கம், மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன், புளொட் அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் சந்திரகுலசிங்கம், முன்னாள் மன்னார் நகர சபை உறுப்பினர் ரட்ணசிங்கம் குமரேஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.