தமது விடுதலையை வலியுறுத்திய தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இன்று 7ஆவது நாளாகவும் தொடர்கின்றது. உண்ணாவிரதத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்ட 20 இற்கும் மேற்பட்டோர் சிறைச்சாலை வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டபோதும், அவர்களில் பெரும்பாலானோர் சிகிச்சையைப் புறக்கணித்துள்ளனர்.
இவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அரசின் சார்பில் எந்தவித உறுதியான நடவடிக்கையும் நேற்று மாலை வரை மேற்கொள்ளப்படவில்லை எனக் கைதிகள் கவலை வெளியிட்டனர். இன்று 7 ஆவது நாளாகவும் தொடரும் போராட்டத்தால் 20 இற்கும் மேற்பட்ட கைதிகளின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் சிறைச்சாலை வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டபோதும், தாம் சிகிச்சையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டிலுள்ள கைதிகள் சிகிச்சையைப் புறக்கணித்துள்ளனர். அரசு தம்மை விடுதலைசெய்யும்வரை சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டில் கைதிகள் இருக்கின்றனர்.
ஏற்கனவே, கைதிகளை விடுவிப்பதாக அரசு உறுதியளித்தபோதும், அந்த உறுதி நிறைவேற்றப்படாததாலும் கடும் நிபந்தனைகளுடன் 31 அரசியல் கைதிகளுக்கு முதற்கட்டமாக பிணை வழங்கப்பட்டதாலும், கைதிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
எனவே, தமது விடுதலை குறித்து அரசிடமிருந்து உறுதியான முடிவு கிடைக்கும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் தொடர்பில் நாளைமறுதினம் திங்கட்கிழமை முடிவெடுப்பதாக வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரனிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுமுன்தினம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.