அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாளை ஹர்த்தால்

நீண்டகாலமாக இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி நாளை 13ஆம் திகதி வடக்கு, கிழக்கில் பூரண கடையடைப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இப் போராட்டத்திற்கு அரசியல் கட்சிகளும் பொது அமைப்புக்களும் அழைப்பு விடுத்துள்ளன.

அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் விதமாக நாளை வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்றும் கைதிகளை விடுவிக்க அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க அரசை வலியுறுத்துவதாகவும் இதன்போது தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

வர்த்தக நிலையங்கள், போக்குவரத்து துறை, பொதுச்சந்தைகள் முதலான துறைகளை இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறும் அவர் கோரியுள்ளார்.

தசாப்தகாலமாக பல நூற்றுக்கணக்கானவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் விடுதலையை வலியுறுத்தும் திட்டமிட்டவாறு கடையடைப்புப் போராட்டம் நாளை நடைபெறும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் இந்தப் பிரச்சினை சர்வதேச கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கிலுமே வடகிழக்கு மக்களால் இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாகவும் அந்தக் கட்சி கூறுகிறது.

இதேவேளை கைதிகளின் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் விதமாக வட மாகாணத்தில் முழு அளவில் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வடக்கு மாகாண சபை தெரிவித்துள்ளது.

வட கிழக்கு தமிழர் தாயகம் முழுவதும் நடத்தப்படும் இந்தப் போராட்டத்தின்போது மருத்துவசேவைகள் உள்ளிட்ட அடிப்படை சேவைகளின் போது பாதிப்பு ஏற்படாமலும் பொது அமைதிக்குப் பாதிப்பு வராமல் கண்ணியம் காக்க வேண்டும் என்றும் வட மாகாண முதல்வர் தெரிவித்தார்.

நாளை இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி பொன்ற அரசியல் கட்சிகளும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களும் ஒத்துழைப்பை வழங்குவதாகவும் போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளன.

இதேவேளை அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் போராட்டத்திற்கு தமது முழுமையான ஆதரவு உண்டு என்று யாழ் வணிகர் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழ் கைதிகளின் விவகாரம் தமிழ் மக்களை பெருந்துயரத்தில் தள்ளிய விடயம் என்றும் யாழ் வணிகர் கழகம் தெரிவித்துள்ளது.

புதிய ஆட்சியாளர்கள் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் எந்தவொரு தீர்வையும் ஆண்டு ஒன்று நிறைவடையும் இந்த தருணத்திலும் வழங்கவில்லை என்றும் தற்போதைய நிலையில் தமிழ் மக்கள் அரசுமீது நம்பிக்கை இழக்கும் அபாயம் தோன்றியுள்ளதாகவும் அக் கழகம் எச்சரித்துள்ளது.

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நாளை ஆலய வழிபாடுகளில் ஈடுபடுமாறு அகில இலங்கை இந்துமாமன்றம் அழைப்பு விடுத்துள்ளது.

வடக்கு கிழக்கில் உள்ள சகல இந்து ஆலயங்களிலும் விசேட வழிபாட்டில் ஈடுபடுமாறும் திருமுறை முற்றோதுமாறும் இந்துமாமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்திற்கு வட மாகாண ஆசிரிய ஆலோசகர் சங்கம் தமது பூரண ஆதரவை தெரிவித்துள்ளது.

வட மாகாணத்தின் 12 வலயங்களிலும் உள்ள ஆசிரிய ஆலோசகர்கள் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறும் அச் சங்கம் அறிவித்துள்ளது

Related Posts