தமிழ் அரசி யல் கைதிகளின் விடயத்திற்கு விரைவில் நிரந்தரத் தீர்வு கிடைக்குமென தெரிவித்துள்ள அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.
சிறைச்சாலைகள் விவகார அமைச்சராக நேற்று பதவியேற்ற பின்னர் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாக கூறப்படுகின்றது. அவை தொடர்பில் விசேட கவனமெடுக்கப்படவுள்ளன.
நாடாளவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதுதொடர்பில் எனது தலைமையில் ஜனாதிபதி,பிரதமர் உள்ளிட்டோருடன் விசேட கலந்துரையாடல்களை மேற்கொள்ளவதற்கு திட்டமிட்டுள்ளேன்.
மேலும் சிறைக்கைதிகளும் மனிதர்களே என்பதை நெஞ்சில்நிறுத்தி அவர்களின் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளித்து அவர்களின் தேவைப்பாடுகள் தொடர்பிலும் அதிகூடிய கவனமெடுக்கவுள்ளேன்.
வெலிக்கடைச் சிறைச்சாலை உட்பட தலைநகரினுள் காணப்படும் சிறைச்சாலைகளை இடமாற்றுவது குறித்து பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. அவை குறித்து உரிய ஆராய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதனடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அதேவேளை தமிழ் அரசியல் கைதிகளுக்கு எவ்வாறான தீர்வு வழங்கப்படவுள்ளது என வினவியபோது,
தற்போது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதமிருக்கும் கைதிகளை நான் நேரில் சென்று பார்வையிட்டிருந்தேன். அவர்களின் விடுதலை தொடர்பாக நான் ஜனாதிபதியிடத்திலும், பிரதமரிடத்திலும் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தேன்.
அதனடிப்படையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். குறிப்பாக அவர்களுக்கு பிணை வழங்குவதற்கான செயற்பாடுகளுக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் அவர்களுக்கு பிணை வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எனது அதிகாரத்திற்கு உட்பட்ட வகையில் ஜனாதிபதி, மற்றும் பிரதமர் ஊடாக தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன் என்றார்