அரசியல் கைதிகளின் விடுதலைக்காக எதிர்வரும் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள பூரண ஹர்த்தாலுக்கு மக்களை ஒத்துழைக்குமாறு கோரியுள்ளார் வடக்கு மாகாண அமைச்சர் பா. டெனிஸ்வரன்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-
“கடந்த மாதம் தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் ஜனாதிபதியின் வாக்குறுதியை தொடர்ந்து கைவிடப்பட்டிருந்தது. ஆனால், கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசு எந்தவித நடவடிக்கைகளையும் முன்னெடுக்காத காரணத்தினால் மீண்டும் தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
நாடு முழவதும் உள்ள 14 சிறைச்சாலைகளில் மொத்தமாக 262 அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 127 பேர் வடமாகாணத்தை சேர்ந்தவர்களும் 42 பேர் தண்டனை வழங்கப்பட்டவர்களும், 9 பெண்களும், 6 முஸ்லிம்களும், 4 சிங்களவர்களும் அடங்குவர். ஏனையவர்கள் வெளிமாகாணங்களைச் சேர்ந்தவர்களாகவும் காணப்படுகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் 5 தொடக்கம் 10 வருடங்களுக்கு மேல் சிறைகளில் வாடுகின்றனர். அவர்களுக்கு பொது மன்னிப்பளித்து விடுதலை செய்ய வேண்டும் என்று கோருவதுடன் கைதிகளின் விடுதலைக்கான உண்ணாவிரதப்போராட்டத்துக்கு வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து மக்களும் ஒத்தழைப்பு வழங்க வேண்டும்.
விசேட விதமாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்கள், வர்த்தக சங்கங்கள், தமது வழமையான நடவடிக்கைகளை எதிர்வரும் 13ஆம் திகதி நிறுத்தி கைதிகளின் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கவேண்டும்.
மேலும் கடந்த காலங்களில் கைதிகளுக்கு பொது மன்னிப்பளித்து விடுதலை செய்தது போல் தமிழ் அரசியல் கைதிகளுக்கும் விடுதலை வழங்க வேண்டும்.
இலங்கை ஜனாதிபதி இந்தக் கைதிகளை தமது பிள்ளைகள்போல் எண்ணி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்.
அத்துடன் இந்த ஹர்த்தால் நடவடிக்கைகளால் எவராவது பாதிக்கப்படின் அவர்களுக்கு தனது மனவருத்தத்தை தெரிவித்துக்கொள்ளுவதுடன் விசேட விதமாக மாணவர்கள் மற்றும் நோயாளர்கள் எமது உறவுகளின் விடுதலைக்காக பெருமனதோடு சிரமங்களை பொறுத்துகொள்ளுமாறும் வேண்டிக்கொள்கின்றேன்.
மேலும் விசேடவிதமாக வடமாகாணத்தில் இருக்கின்ற முஸ்லிம் மக்களும் இந்த ஹர்தாலுக்கு தங்களது பூரண ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்று அன்பாக வேண்டுவதோடு, முடியுமானால் அரச உத்தியோக்தகத்தர்களும் தங்களது ஆதரவை வழங்கவேண்டும்” – என்றுள்ளது.