ஈழத்தின் மூத்த எழுத்தாளர் சி. சிவசரவணபவன் (சிற்பி) காலமானார்

11246260_10154317629038709_6104227793961743080_nஈழத்தின் மூத்த எழுத்தாளர் சி. சிவசரவணபவன் (சிற்பி) அவர்கள் இன்று (09-11-2015) காலமானார் . அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (10-11-2015) செவ்வாய்க் கிழமை மாலை 5.00 மணியளவில் கந்தரோடையில் நடை பெற்றுத் தகனக் கிரியை கந்தரோடை இந்து மயானத்தில் நடை பெறும்.

1933ல் காரைநகரில் பிறந்த இவர் ஓய்வு பெற்ற பாடசாலை அதிபர் ஆவார்.உசன் இராமநாதன் மகா வித்தியாலயம், யாழ். வைத்தீசுவரக் கல்லூரி என்பவற்றில் புகழ் பூத்த அதிபராக விளங்கினார்.

 ஈழத்தின் குறிப்பிடத்தக்க ஓர் எழுத்தாளர். சிறுகதையாசிரியர், நாவலாசிரியர், சஞ்சிகையாசிரியர் எனப் பல தளங்களிலும் இயங்கியவர்.  பலரை இலக்கியத்துறைக்குள் ஈடுபடுத்தியவர்.

சிற்பி சரவணபவன் 1958 சூலை முதல் வெளிவரத்தொடங்கிய சஞ்சிகையான கலைச்செல்வியின் ஆசிரியர் ஆவார். கலைச்செல்வியின் கடைசி இதழ் 1966 ஆவணியில் வெளியானது.யாழ்ப் பாணத்தில் இருந்து வெளிவந்த ”இந்து சாதனம்” சஞ்சிகையின் ஆசிரியராகவும் தொழிற்பட்டார்

1953 இல் சென்னை கிறிஸ்த்துவக் கல்லூரியில் கல்விகற்கும் வேளையில் இளந் தமிழன் என்ற சஞ்சிகையின் ஆசிரியரானார். சிற்பியின் முதற் சிறுகதையான மலர்ந்த காதல் 1952 இல் சுதந்திரனில் பிரசுரமானது. 1955 இல் உதயம் சஞ்சிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது மறுமணம் என்ற சிறுகதை முதற்பரிசினைப் பெற்றது.

ஈழத்தின் பல்வேறு பத்திரிகைகளிலும் தமிழக சஞ்சிகைகளான கல்கி, மஞ்சரி, புதுமை, கலைமகள், தீபம் ஆகிய சஞ்சிகைகளிலும் இவரது சிறுகதைகள் வெளியாகியுள்ளன. அக்காலப்பகுதியில் திருவல்லிக்கேணி ஒளவை தமிழ்ச்சங்கம் நடத்திய கட்டுரைப் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றார். சென்னை திருத்துவக் கல்லூரியில் தமிழ் மொழிக்கான ராஜா சேதுபதி தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.

ஈழத்து எழுத்தாளர் பன்னிரண்டு பேரின் சிறுகதைகளைத் தொகுத்து 1958 இல் ஈழத்துச் சிறுகதைகள் என்னும் சிறுகதைத் தொகுப்பைக் கந்தரோடைத் தமிழருவிப் பதிப்பகம் மூலம் வெளியிட்டார். ஈழத்து எழுத்தாளர்கள் பலரது சிறுகதைகள் தொகுக்கப்பட்டது இதுவே முதற்தடவையாகும்.

சிற்பி என்ற பெயரிலேயே பல சிறுகதைகளையும் உனக்காக கண்ணே என்ற பிரபல நாவலையும் எழுதிய இவரது முழுப்பெயர் பிரம்மஸ்ரீ  சிவசுப்பிரம்மண்ய ஐயர் சிவசரவணபவன் . தாயார் சௌந்தராம்பாள் ஆவார்.

யாழ்வாசி என்ற புனை பெயரிலும் பல ஆக்கங்களை படைத்த இவர் பல விருதுகளை பெற்றவர். இவர் ஈழத்து சிறுகதை வரலாற்றின் எல்லாக்கால கட்டங்களிலும் எழுதி வந்தவர்.இறக்கும் போது இவருக்கு வயது 82

Related Posts