பதவி விலகல் குறித்து விளக்கமளிக்கிறார் திலக் மாரப்பன

ஊடகங்கள் வாயிலாக தனக்கு தொடர்ந்து சேறு பூசுவதாகவும், தன்மீது சேறு பூசிக் கொள்ள தனக்கு விருப்பமில்லை என்பதனால் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்ததாகவும் முன்னாள் சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.

எவன் கார்ட் நிறுவனத்தின் சர்ச்சைக்குறிய ஆயுதக் கப்பலில் இருந்து நாளொன்றுக்கு சுமார் 30 தடவையாவது ஆயுதங்கள் பரிமாறப்படுவதாக அவர் தெரிவித்தார்.

கடற்படையினர் மற்றும் ரக்னா லங்கா நிறுவனத்தினர், குறித்த ஆயுதக் கப்பலில் இருந்து இவ்வாறு ஆயுதங்களை கொண்டு செல்வது மற்றும் மீண்டும் கொண்டு வருவது போன்ற நடவடிக்கையில் இந்த நிமிடம் வரைக்கும் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ரக்னா லங்கா என்பது முற்று முழுதாக அரசாங்கத்தினால் இயக்கப்பட்டு வரக்கூடிய ஒரு நிறுவனம்.

இந்த ஆயுதக்கப்பலானது 24 மணித்தியாலமும் கடற்படையினராலே பராமறிக்கப்பட்டு வருகின்றது எனத் தெரிவித்தார்.

இன்று அவரது வீட்டில் இடம்பெற்ற விஷேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

குறித்த ஆயுதக் கப்பல் இருக்கும் இடத்தில் இருந்து 100 மீற்றர் தூரத்தில் காலி துறைமுக பொலிஸார் இருப்தாகவும், இவ்வளவு காலம் வரையும் அதனை அவர்கள் காணவில்லை என்பது தொடர்பில் சந்தேகம் எழுவதாகவும் குறிப்பிட்ட அவர், திடீரென கண்டுபிடித்து புள்ளிகள் போட முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டார்.

தான் அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமா செய்தாலும் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட போவதாக அவர் குறிப்பட்டார்.

அத்துடன் இந்த அரசாங்கம் உருவாவதற்கு தான் பாரிய பங்களிப்பு வழங்கியதாகவும் தெரிவித்தார்.

விசாரணைகளுக்கு பாதிப்புக்கள் ஏற்படாமல் இருப்பதற்கு தான் அமைச்சுப் பதவியில் இருந்து விலகியதாக குறிப்பிட்ட அவர், இதன்காரணமாக தற்பொழுது மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் இருந்து வௌிவரும் உண்மைகளை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றும் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.

Related Posts