யாழ்.மாவட்டத்தில் வாகனங்களுக்கு புகைப்பரிசோதனை மேற்கொள்ள வருபவர்கள் முக்கிய ஆவணங்களை கொண்டு வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதென்பதுடன் அவ்வாறு கொண்டுவரத் தவறும் பட்சத்தில் புகைப்பரிசோதனை மேற்கொள்ளப்படமாட்டாது என யாழ்.மாவட்டச் செயலகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் புகைப்பரிசோதனையின் போது மூலப் பதிவுச் சான்றிதழ் (Original Certificate of Registration) அல்லது வாகன அடையாள அட்டை மூலப்பிரதி (Original Vehicle Identy Card) இனை வாகனத்துடன் கொண்டு வரவேண்டும்.
உங்கள் வாகனம் குத்தகை (Leasing) என்றால் குத்தகை கம்பனி அல்லது வங்கி பதிவு மூலச் சான்றிதழின் பிர தியில் திகதியுடன் கூடிய கையொப்பத்துடன் (ஒருமாத காலத்திற்கு உட்பட்ட/ அண்மையில் எடுக்கப்பட்ட) இறப்பர் முத்திரை இடப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டிருத்தல் ( True Copy of Certificate of Registration) வேண்டும்.
வாகன மூலப் பதிவுச் சான்றிதழ் உடமை மாற்றத்திற்கு அனுப்பப்பட்டிருந்தால் ( Transfer) பிரதேச செயலகம் ஊடாக அனுப்பியதற்கு வழங்கப்படும் பத்திரத்துடன் (CMT 52) மூலச் சான்றிதழின் பிரதியினை திகதியுடன் கூடிய (ஒரு வருட காலத்திற்கு உட்பட்ட/ அண்மையில் எடுக்கப்பட்ட) கையொப்பத்துடன் இறப்பர் முத்திரை இடப்பட்டு உறுதிப்படுத்தி இணைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
வாகன இலக்கத்தகடு தொலைந்திருந்தால் அல்லது புதிதாக அதற்கு விண்ணப்பித்திருந்தால் பிரதேச செயலகத்தினால் வழங்கப்படும் அதற்கான பத்திரம் (ஒரு வருட காலத்திற்கு உட்பட்ட/ அண்மையில் எடுக்கப்பட்ட) சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
மேலும் புகைப்பரிசோதனையின் போது தேவையான ஆவணங்கள் பற்றிய விபரங்களை புகைப்பரிசோதனை நிலையங்களிலும் பிரதேச செயலகங்களிலும் மற்றும் மாவட்டச் செயலகத்திலுள்ள மோட்டார் வாகன திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.