சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் இரத்த பரிசோதனை அறிக்கைக்கும் வெளியில் தனியார் இரத்த பரிசோதனை நிலையங்களில் மேற்கொள்ளப்படும் இரத்த பரிசோதனை அறிக்கைக்கும் இடையில் வித்தியாசம் காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
தென்மராட்சிப் பகுதியில் தற்போது அதிகமாக டெங்கு நோயின் தாக்கம் இருப்பதால், காய்ச்சலால் பீடிக்கப்படும் நோயாளிகளை எஃப்.பி.சி (முழு இரத்த கணிப்பீடு) பரிசோதனைக்கு உட்படுத்துமாறு வைத்தியவர்கள் பணிக்கின்றனர்.
இதில், பிளட்லெட் எனப்படும் குறுதிச் சிறுதட்டுக்கள் 150,000க்கும் 400,000க்கும் இடையில் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் குறைந்து காணப்பட்டால், குறித்த நபர்கள் வைத்தியசாலையில் நிறுத்திவைக்கப்பட்டு, அவர்களுக்கு டெங்கு அல்லது வைரஸ் காய்ச்சலுக்கான சிகிச்சை வைத்தியசாலையில் அளிக்கப்படும்.
ஆனால், இந்தப் பரிசோதனையை வைத்தியசாலையில் மேற்கொண்ட ஒருவருக்கு குறுதிச் சிறுதட்டுக்கள் குறைந்துள்ளதாகவும் வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு வைத்தியர் கூறியநிலையில், அவர் தனது இரத்தப் பரிசோதனையை வெளியில் தனியார் பரிசோதனைக் கூட்டத்தில் மேற்கொண்ட போது, வைத்தியசாலையில் கூறப்பட்ட குறுதிச் சிறுதட்டுக்களின் எண்ணிக்கையை விட 50 ஆயிரம் வரையில் கூடுதலாக காணப்பட்டது. ஒருவர் மாத்திரமல்ல பலருக்கு இவ்வாறு கூடுதலாகக் காட்டியுள்ளது.
இது தொடர்பில் வைத்தியசாலையில் கேட்டபோது, தங்களின் பரிசோதனை அறிக்கையானது சரியெனக்கூறினர்.
இவ்வாறு இரண்டு அறிக்கைகளிலும் ஏற்படும் வித்தியாசம் காரணமாக, தாங்கள் குழப்பமடைந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.