தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிப்பது குறித்து விரைவில் தீர்க்கமான முடிவொன்று அறிவிக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றது.
இதன்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக நாம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருடன் இன்று (நேற்று) சந்திப்பொன்றை நடத்தியிருந்தோம். தற்போது 214 தமிழ் அரசியல் கைதிகள் நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 32 பேர் எதிர்வரும் திங்கட்கிழமை விடுதலை செய்யப்படவுள்ளனர்.எஞ்சியோரில் 30பேர் எதிர்வரும் 20ம் திகதிக்கு முன்னதாக விடுதலை செய்யப்படவுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பின் போது இணக்கம் எட்டப்பட்டுள்ளது. தடுத்து வைக்கப்பட்டுள்ளோரில் 48பேர் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டுள்ளனர். எஞ்சியோரின் விடுதலை தொடர்பாக நடவடிக்கைகளை எடுப்பதற்கு தனியே சட்டமா அதிபர் திணைக்களத்தின் நடவடிக்கைகளுக்கு அப்பால் அமைச்சரவை குழுவொன்றை நியமிப்பதாக இணக்கம் காணப்பட்டது.
இந்நிலையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பு இடம்பெற்றது. அவருடனான சந்திப்பின் போது கைதிகளின் விடுதலை மற்றும் பொதுமன்னிப்பு தொடர்பாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகள், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தோம்.
அதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுதலை செய்யப்படுவோர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டோர் தவிர்ந்த ஏனோரின் விடுதலை தொடர்பாக நடவடிக்கைளை எடுப்பதாகவும் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்வதற்குரிய செயற்பாடுகளை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைளை விரைவில் மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன், மாவை.சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.