ஆவணப்படம், குறும்படம் தயாரித்தல் தொடர்பான கருத்தரங்கு!

ஆவணப்படம், குறும்படம் தயாரித்தல் தொடர்பான கருத்தரங்கொன்று எதிர்வரும் டிசெம்பர் மாதம் 14 ஆம் திகதியிலிருந்து 18 ஆம் திகதி வரை அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

ஆசிய திரைப்பட மையத்தின் பங்களிப்புடன் இணைந்து தகவல் திணைக்களத்தின் அரசாங்க திரைப்பட பிரிவினரால் இதற்கென ஏற்பாடுகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நடைபெறவுள்ள இக்கருத்தரங்கு இந்தியாவின் சென்னை மாநிலத்து திரைப்பட இயக்குனர் கே.ஹரிகரனால் தலைமை தாங்கி நடத்தப்படவுள்ளது. திரைப்படம் தயாரிப்பது தொடர்பில் புனேவிலுள்ள இந்திய திரைப்படக் கல்லூரியில் பட்டப்படிப்பினை முடித்த இவர், சினிமாத்துறையில் திறமை வாய்ந்ததும் அனைவராலும் விரும்பப்படுகின்றதொரு நல்ல ஆசானாவார்.

மராத்தி, தமிழ், மற்றும் ஹிந்தி மொழிகள் என மூன்று மொழிகளிலும் தனது திறமையை நிலைநாட்டி வரும் ஹரிஹரன் இதுவரையில் சுமார் ஏழு முழுநீள திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவற்றுள் மூன்று படங்கள் சர்வதேச அளவிலும் தேசிய அளவிலும் பல விருதுகளை குவித்துள்ளதுடன், பேர்லின், எடின்பேர்க், மொஸ்கோ, எனப்பல இடங்களில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளன.

அத்துடன் ஆவணப்படங்கள் குறும்படங்கள் தயாரிப்பதிலும் மிகுந்த ஆர்வத்தினை கொண்டுள்ள இவர், தனது ஆவணப் படம் மற்றும் குறும் படங்களின் மூலம் சமூகத்துக்கு நல்ல கருத்துக்களை முன்வைத்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடைபெறவுள்ள இக்கருத்தரங்கானது ஆங்கில மொழியில் இடம்பெறும். அத்துடன் ஐந்து நாட்கள் இடம்பெறவுள்ள இக்கருத்தரங்கானது ஆவணப்படம் குறும்படம் தயாரிப்பதில் சிறந்த விரிவுரையாளர்கள், படப்பிடிப்பு, படத்தொகுப்பில் சிறந்து விளங்குபவர்கள், பேராசிரியர்கள் என அனைவரையும் உள்ளடக்கி இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள கருத்தரங்கின் நிறைவில் பங்குபற்றிய அனைவருக்கும் திரைப்பட இயக்குனர் கே.ஹரிகரனால் கையெழுத்திட்ட மதிப்பு மிக்கதொரு சான்றிதழும் வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள லால் விஜேதுங்க (0714413388 / lalwije@hotmail.com), தரிந்து ஜயதிஸ்ஸ (0711342232 / tharindujayatissa@yahoo.com), அரசாங்க தகவல் திணைக்களம், மற்றும் ஆசிய திரைப்பட மையத்தின் அலுவலக இணையத்தளத்தினூடாகவும் (asianfilmcentre@gmail.com) பெற்றுக்கொள்ள முடியும்.

Related Posts