தனியாக வசித்த மூதாட்டியைக் கொலை செய்துவிட்டு அங்கிருந்த பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டிருப்பதாகத் தெரிய வருகின்றது.
பாலசிங்கம் சிறிதேவி (வயது 67) என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டவராவர்.
நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு யாழ்ப்பாணம் – உடுவில் – லவ் லேனில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் அறியவருவதாவது:
பெண்ணின் வீட்டில் அவர் மட்டுமே வசித்து வந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை மாலை வரை அவரின் நடமாட்டத்தைக் காணாத அயலவர்கள் சந்தேகத்தில் பொலிஸாருக்குத் தகவல் அளித்தனர்.
அங்கு சென்ற பொலிஸார் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது கை, கால்கள் கட்டப்பட்டு, வாயில் துணி அடைந்த நிலையில் மூதாட்டி இறந்து கிடந்தார்.
அத்துடன் வீட்டின் யன்னல் கம்பி வளைக்கப்பட்டு இருந்ததுடன், பின்புறக் கதவும் உடைக்கப்பட்டுக் காணப்பட்டது. அத்துடன் வீட்டில் இருந்த சகல பொருட்களும் சிதறிக் கிடந்தன.
அத்துடன் பெறுமதி மிக்க பொருட்களையும் காணவில்லை. இதனால் அப்பொருட்களை கொள்ளையிடுவதற்காகவே மூதாட்டி கொல்லப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் தெரிவித்தனர். மேலும் கொள்ளையிடப்பட்ட பொருட்கள் குறித்து எதுவும் தெரியாத நிலையில் மூதாட்டியின் உறவினர்களை விசாரித்தாலே அங்கிருந்த பெறுமதியான பொருட்கள் குறித்துத் தெரிய வரும் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.