தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் நாசர், விஷால், கார்த்தி, கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்துள்ளனர். நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டுதல், உறுப்பினர்கள் பட்டியல் சரிபார்த்தல் போன்ற பணிகளில் புதிய நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நடிகர் சங்கத்தில் உள்ள நாடக நடிகர்கள் பற்றிய கணக்கெடுப்பு விரைவில் தொடங்க உள்ளது. இதற்காக நடிகர் சங்கத்தில் உள்ள நிர்வாகிகள் 10 பேர் தனி குழுக்களாக, அனைத்து மாவட்டங்களுக்கும் செல்கின்றனர். நாடக நடிகர்களின் வீடுகளுக்கு நேரில் போய் சந்தித்து, அவர்களது வாழ்வாதாரம், வருமானம், தற்போதைய நிலை, செய்யும் தொழில் போன்ற விவரங்களை சேகரித்து தலைமைக்கு தெரிவிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதற்கான பணி தீபாவளி பண்டிகைக்கு பின் தொடங்க இருப்பதாக நடிகர் சங்க வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நடிகர் சங்கம் சார்பில் தீபாவளி பரிசு வழங்கப்பட உள்ளது. சங்கத்தில் உள்ள உறுப்பினர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட 3,500 பேர்களுக்கு இந்த பரிசுகள் வழங்கப்படுகின்றன. ஆண்களுக்கு வேட்டியும், பெண்களுக்கு சேலையும், இனிப்பும் வழங்கப்படுகிறது. இந்த பரிசு பைகள் அனைத்தும் அவரவர்களின் வீடுகளுக்கு சென்றடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.