தேசிய இளைஞர் சேவை சபை, இலங்கை இளைஞர் சமூக சம்மேளனம் மற்றும் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சு என்பன இணைந்து ஏற்படுத்தப்பட்டுள்ள இளைஞர் பாராளுமன்றத்துக்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதி காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணிவரையில் 334 பிரதேச செயலகங்களிலும் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் வாக்களிப்பதற்கான உரிமையை நாடு முழுவதிலும் இயங்கும் பதிவு செய்யப்பட்ட 12938 இளைஞர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பெற்றுள்ளனர்.
இவ்வாறு பதிவு செய்யப்பட்ட அமைப்புக்களிலுள்ள சுமார் 5 இலட்சம் பேர் வாக்காளர்களாகக் காணப்படுகின்றனர்.
நாடு முழுவதிலுமிருந்து 160 தொகுதிகளிலிருந்து இளைஞர் பாராளுமன்றத்துக்கு பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இப்பாராளுமன்றத்தில் 225 பேர் உள்ளனர். இவர்களில் இளைஞர் அமைப்புக்களின் வாக்கினால் 160 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
அத்துடன், பல்கலைக்கழகம், சட்டக் கல்லூரி, சட்ட பீடம், பாடசாலை மாணவர் தலைவர் (அரசியல் துறைசார்ந்த), விசேட கல்வித் தேவையுடைய மாணவர்கள், இளைஞர் அமைப்புக்கள் தவிர்ந்த ஏனை அமைப்புக்களில் உள்ள 18-28 ஆகிய வயதெல்லைக்குட்பட்டவர்கள் ஆகியோரிலிருந்து கிடைக்கப் பெறும் விண்ணப்பங்களிலிருந்து நேர்முகப்பரீட்சைக்குட்படுத்தி 65 பேர் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது