யாழ். நகரில் இயங்கும் பல உணவகங்களிலும் பெரும் சுகாதாரச் சீர்கேடுகள் இடம்பெறுகின்றன என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனினும் இது விடயத்தில் சுகாதாரப் பிரிவினர் கண்டும் காணாதபோக்கில் செயற்படுகின்றனர் எனவும் அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் யாழ். புகையிரத நிலையத்திற்கு அண்மையில் உள்ள உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட உணவுக்குள் தீக்குச்சி காணப்பட்டதுடன், இறைச்சியில் அகற்றப்படாத இறக்கையும் காணப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டது.
இதையடுத்து அந்த உணவகத்தின் உரிமையாளாருக்கு நீதிமன்றால் தண்டம் விதிக்கப்பட்டதுடன் பாதிக்கப்பட்டவருக்கு நஷ்டஈடும் வழங்கப்பட்டது.
இதேபோன்று யாழ். நகர மத்தியில் உள்ள உணவகம் ஒன்றில் விருந்துக்காக வாங்கிய உணவு பழுதடைந்தமையால் அதை உண்ட மாணவர்கள் உட்பட சிலர் உபாதைகளுக்கு உள்ளாகியிருந்தனர்.
இவ்வாறு பிரபல உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளில் கழிவுப் பொருள்கள், உணவுப் பொருள் அல்லாத பொருள்கள் என்பன காணப்படுகின்றமை குறித்து பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களிடம் முறைப்பாடு செய்யப்பட்டபோதும் குறித்த உணவகங்களுக்கு எதிராக இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
இதனால் உணவகங்கள் தொடர்ந்தும் நுகர்வோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்திலான தங்கள் நடவடிக்கைகளைத் தொடர்ந்து வருகின்றன.
இரு வருடங்களுக்கு முன்னர் யாழ். மாவட்டத்தில் உள்ள உணவகங்கள் அனைத்தும் தரம் பிரிக்கப்பட்டு உயர்தரம் மிக்க உணவகங்களுக்கு A தர சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஆனால் அந்த A தர சான்றிதழ்களைப் பெற்ற உணவகங்களில் பலவே இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன எனவும் மக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் இது விடயத்தில் சுகாதாரப் பிரிவு அதிகாரிகளும், வட மாகாண சுகாதார அமைச்சும் உடன் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மக்கள் கோரியுள்ளனர்.