புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகத்திற்குட்பட்ட தனியாருக்கு சொந்தமான காணியை பிரிகேடியர் வனசிங்க தலைமையிலான 682 ஆவது காலால் படைப்பிரிவு கையகப்படுத்தியுள்ளதாக காணியை இழந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
வடக்கில் புதுக்குடியிருப்பு – புதுமாத்தளன் வீதியையும், கிழக்கில் வைத்தியசாலைக்கு முன்னாலுள்ள வீதியையும், தெற்கு, மேற்கு ஆகிய பகுதிகளில் வைத்தியசாலைக்கு முன்னாள் உள்ள வீதிகளையும் கையகப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காணியில் ஏழே முக்கால் ஏக்கர் காணி மக்களுடையது எனவும் ஏனைய 10 ஏக்கர் காணி அரசாங்க காணி எனவும் எனினும் குறித்த காணியில் மக்கள் 30 வருட காலமாக வாழ்ந்து வந்ததாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
பிரதேசசெயலாளரிடமிருந்து காணி உறுதிகளை பெற்றுக்கொண்ட இராணுவத்தினர் குறித்த காணிகளை கையகப்படுத்தியுள்ளதாகவும், குறித்த வளங்களையும் இராணுவத்தினரே பெற்று வருவதாகவும் காணி உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தமது சொந்த நிலங்களில் மீள்குடியேற முடியாத நிலையில் தாம் தொடர்ந்தும் வாடகை வீடுகளில் வசித்து வருவதாகவும் குறிப்பிடுகின்றனர். எனினும் தமது சொந்தநிலங்களுக்காக போராட்டங்களை மேற்கொண்டபோதும் இதுவரை அந்த மக்களுக்கு எந்தவித பலனும் கிடைக்கவில்லை என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
2009 ஆம் ஆண்டு ஏற்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக அங்கிருந்து வெளியேறிய மக்கள் மெனிக்பாம் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இதன்பின்னர் பகுதி பகுதியான முறையில் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர்.
எனினும் இராணுவத்தின் தேவைக்காக பல இடங்களில் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.