அஜித் நடித்துள்ள ‘வேதாளம்’ படம் தீபாவளி தினத்தில் திரைக்கு வருகிறது. இந்த படத்தின் ‘டீசர்’ சமீபத்தில் வெளியிடப்பட்டது. இணையதளத்தில் வெளியான இதை லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்த்து ரசித்தனர். இதற்கு ஏக வரவேற்பு இருந்ததாக செய்திகள் வெளியாகின.
தற்போது அட்லி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பின் போது, விஜய், வேதாளம் டீசரை பார்த்து ரசித்தார். அத்துடன் நிற்கவில்லை. ‘அஜித் கெட்டப் சூப்பராக இருக்கிறது’ என்று மனம் திறந்து பாராட்டினார்.
தமிழ் திரை உலகில் அஜித்–விஜய் ரசிகர்கள் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொள்வது உண்டு. இந்த நிலையில் அஜித்தை விஜய் பாராட்டி மகிழ்ந்ததை நேரில் கண்ட அவரது படக்குழுவினர் அனைவரும் ஆச்சர்யம் அடைந்தனர்.
விஜய்–அஜித் இருவரும் திரை உலகில் காலடி எடுத்து வைத்த கால கட்டத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ என்ற படத்தில் நண்பர்களாக நடித்தனர். அதன் பிறகும் அவர்கள் நல்ல நண்பர்களாகவே இருக்கிறார்கள். ஒருவர் படத்தை மற்றவர் பார்த்து போனில் கருத்துக்களையும் பரிமாறிக் கொள்கிறார்கள். இருவரிடையே நல்ல நட்பு இருந்து வருகிறது. அதற்கு இதுவும் ஒரு உதாரணம் என்று இவர்களைப் பற்றி நன்கு அறிந்த திரை உலக மூத்த பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.