அதிக மரங்களை நடுகை செய்யும் பொதுஅமைப்புகளுக்கு பிரமாண அடிப்படையிலான நன்கொடை உதவியில் முன்னுரிமை – பொ.ஐங்கரநேசன்அறிவிப்பு

வடமாகாண மரநடுகை மாதமான கார்த்திகையில் அதிக எண்ணிக்கையிலான மரக்கன்றுகளை நடுகைசெய்து பராமரிக்கும் பொது அமைப்புகளுக்கு, பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியில் இருந்து வழங்கப்படும் உதவிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்று வடக்கு சுற்றாடல் அமைச்சர்பொ.ஐங்கரநேசன் அறிவித்துள்ளார்.

வடமாகாண மரநடுகை மாதம் தொடர்பாக யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த சனசமூக நிலையங்கள், மாதர் அமைப்புகள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள் போன்ற பொதுஅமைப்புகளுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25.10.2015) யாழ் மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இதனை அறிவித்துள்ளார்.

அவர் அங்கு உரையாற்றுகையில்,

வடக்கு மாகாணத்தைப் பசுமையாக்கும் திட்டத்தின் ஒரு கட்டமாக வடமாகாண மரநடுகை மாதமான கார்த்திகையில் ஐந்து இலட்சம் மரக்கன்றுகளை நடுவதற்குத் தீர்மானித்துள்ளோம். நடுகை செய்தால் மட்டும் போதாது. குறிப்பிட்ட காலம் வரையில் கண்ணும் கருத்துமாக அவற்றைப் பராமரிக்கவும் வேண்டும்.

மிகவும் அத்தியாவசியமான இந்தப் பாரிய பணியில் பொதுஅமைப்புகளை நம்பித்தான் நாங்கள் இறங்கியுள்ளோம். பொதுமக்களின் பங்கேற்பு இல்லாத எந்தத் திட்டமும் வெற்றி பெறாது. கடந்த ஆண்டு மரநடுகை மாதத்தின்போது, கவனமாக நட்டுப் பராமரிப்போம் என்று உறுதிமொழி பெற்று பல ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு மரக்கன்றுகளை இலவசமாக வழங்கியிருந்தோம். அவற்றில் பெரும்பாலானவை இன்று செழித்து வளர்ந்திருக்கின்றன.

பொதுஅமைப்புகள் பொதுக் காணிகளிலோ அல்லது தனியார் காணிகளிலோ அதிக எண்ணிக்கையான மரங்களை நட்டுப் பராமரிப்பதற்கு முன்வர வேண்டும். அவற்றுக்குத் தேவையான மரக்கன்றுகளை நாம் இலவசமாக வழங்குவதற்குத் தயாராக உள்ளோம். மாகாணசபை உறுப்பினர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியாக, வாழ்வாதார மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கென்று 6 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த நிதியில் இருந்தே சனசமூக நிலையங்கள், மாதர் சங்கங்கள் போன்ற பொதுஅமைப்புகளுக்கும், வாழ்வாதார உதவி தேவைப்படும் பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய தனிநபர்களுக்கும் உதவிகளைச் செய்துவருகிறோம். 2016ஆம் ஆண்டு எனக்கு ஒதுக்கப்பட உள்ள நன்கொடை நிதியில் கூடுதலான மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்கும் அமைப்புகளுக்கே முன்னுரிமை வழங்குவேன் என்ற உத்தரவாதத்தைத் தருகிறேன். மாகாணசபை உறுப்பினர்களிடமும் இதற்கு முன்னுரிமை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

பொதுஅமைப்புகளின் பிரதிநிதிகளால் மண்டபம் நிறைந்திருந்த இந்த நிகழ்ச்சியில் வடமாகாணசபை உறுப்;பினர்கள் பா.கஜதீபன், விந்தன் கனகரத்தினம், ச.சுகிர்தன், அ.பரஞ்சோதி, இ.ஆனல்ட், விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

Tree Planting Meeting - News 25102015 (1)

Tree Planting Meeting - News 25102015 (2)

Tree Planting Meeting - News 25102015 (3)

Tree Planting Meeting - News 25102015 (4)

Tree Planting Meeting - News 25102015 (5)

Tree Planting Meeting - News 25102015 (6)

Tree Planting Meeting - News 25102015 (7)

Tree Planting Meeting - News 25102015 (8)

Tree Planting Meeting - News 25102015 (9)

Tree Planting Meeting - News 25102015 (10)

Tree Planting Meeting - News 25102015 (11)

Related Posts