விமலின் கடவுச்சீட்டு விவகாரம்; பரிதாபப்பட்ட பிரதமர் ரணில்

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் ஐரோப்பிய பயணத்திற்கு தேவையான சகல ஏற்பாடுகளையும் செய்து கொடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாக சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான காரணம் என்ன என்றும் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன பிரதமரிடம் வினவியிருந்தார்.

நீதிமன்ற கட்டளைப் பிரகாரம் தடுத்து வைக்கப்பட்டிருந்தால் தன்னால் எதுவும் செய்ய முடியாதென்றும், வேறு காரணங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்தால் அது தொடர்பில் தேடிப்பார்த்து அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.

அதன்படி பிரதமர் தேடிப்பார்த்துள்ளதாகவும், காணமால் போனதால் செல்லுபடியற்றதாக்குமாறு விமல் வீரவன்சவினால் கோரப்பட்டு, செல்லுபடியற்றதாக்கப்பட்ட கடவுச்சீட்டில் அவர் வெளிநாடு செல்ல முற்பட்டுள்ளதால் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றில் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் சட்ட நடவடிக்கைகளுக்கு சிக்கல்கள் இன்றி விமல் வீரவன்ச வெளிநாடு செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து தருவதாக பிரமர் அறிவித்துள்ளதாக லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்தார்.

Related Posts