கோதுமை மாவின் நுகர்வு குறைவடைந்துள்ள அதேவேளை சங்கங்களில் தீட்டல் பச்சை அரிசியின் நுகர்வு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
கோதுமை மாவின் நுகர்வு குடாநாட்டில் திடீரென வீழ்ச்சியடைந்துள்ளதாகப் பல நோக்குக் கூட்டுறவுச்சங்கங்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மாவின் விலை அதிகரிப்பே இதற்குக் காரணம் என்றும் அவை கூறுகின்றன.
கோதுமை மாவின் விலையை அரசு அண்மையில் 8 ரூபா 50 சதத்தினால் அதிகரித்தது. இதனையடுத்துக் கூட்டுறவுச்சங்கக் கிளைகளில் கோதுமை மாவின் நுகர்வு வெகுவாகக் குறைவடைந்துள்ளதாகக் கிளைமுகாமையாளர்கள் கூறுகின்றனர்.
கூட்டுறவுச் சங்கக் கிளைகளில் கோதுமை மா தற்போது ஒரு கிலோ 80 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. விலை உயர்வினால் கோதுமை மாவைக் கொள்வனவு செய்வதை நுகர்வோர் குறைத்துள்ளதாகவும் இதனால் சங்கக்கிளைகளில் அவை விற்பனை செய்யப்படாமல் தேங்கியுள்ளதாகவும் கூட்டுறவுச் சங்க வட்டாரங்கள் தெரிவித்தன.
கோதுமை மாவின் நுகர்வு குறைவடைந்துள்ள அதேவேளை சங்கங்களில் தீட்டல் பச்சை அரிசியின் நுகர்வு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அநேகமானோர் தற்போது தீட்டல் பச்சை அரிசியை கொள்வனவு செய்வதால் கிளைகளில் அவற்றின் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் இதனையடுத்துச் சங்கங்கள் அனைத்தும் தீட்டல் பச்சை அரிசியை அதிகளவில் கொள்வனவு செய்து விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது.
கோதுமை மாவைத் தவிர்த்துள்ள மக்கள் தீட்டல் பச்சை அரிசியை வாங்கி அதனை மாவாக்கித் தமது உணவுத் தேவைகளுக்காகப் பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.