Ad Widget

யாழ்.பல்கலை இசைத்துறை தலைவர் விசாரணைக்காக இடைநிறுத்தம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவிகளை பாலியல் துஸ்பிரயோக நடவடிக்கைகளுக்கு  உட்படுத்திவந்ததாக குற்றம் சாட்டப்பட்டுவந்த இசைத்துறையின் தலைவர்  விசாரணைக்காக தற்காலிக பணி இடைநிறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்.
குறித்த விரிவுரையாளர் மாணவிகளை தனது பாலியல் இச்சைக்கு பயன்படுத்துவதற்காக பரீட்சை முடிவுகளில் கைவைப்பதான தொடர் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. இது குறித்து மாணவிகள் துணிந்து சாட்சியமளிக்க தயங்கிய நிலையில் அண்மையில் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் தனக்கு நேர்ந்த அநீதி தொடர்பில் எழுத்து மூலமான குற்றச்சாட்டு ஒன்றினை யாழ்.பல்கலைக்கழகத்தின் உயர் பீடத்தின் கவனத்திற்கு கொண்டுவந்திருக்கிறார்.
இதனை அடுத்து பல்கலைக்கழக உயர்மட்டக்குழு ஒன்று தலைமையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. முதற் கட்ட விசாரணையின் அடிப்படையில் குறித்த விரிவுரையாளரை மூன்று மாத காலத்துக்கு இடைநிறுத்துவதாக பல்கலைக்கழக உயர்மட்டக்குழு தீர்மானித்திருக்கிறது. இந்தக் காலப்பகுதி அவருக்கான வேதனமும் வழங்கப்படாது என்றும் தெரியவருகிறது.

இதேவேளை மாணவி என நினைத்து மாணவர் ஒருவருடன் குறித்த விரிவுரையாளர் இரவுப் பொழுதில் தொலைபேசியில் உரையாடிய ஒலி ஆதாரம் ஒன்றும் சிக்கியிருப்பதாகவும் தெரியவருகிறது. அதன் உண்மைத்தன்மை குறித்தும் விசாரணைகள் நடைபெறுகின்றது.

தற்காலிகத்தலைவராக முன்னர் வவுனியா வளாகத்துக்கு தலைவராக இருந்த திரு.க.அருள்வேல்  தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

இதே வேளை இடை நிறுத்தப்பட்ட தர்சனன் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,

பதவி ஆசை பிடித்த சிலரின் பண்பற்ற குற்றச்சாட்டுக்களாலும், வயது குறைந்த ஒருவரான நான் தங்களுக்கு பின்னால் பதவிக்கு வந்த ஒருவரும் எப்படி துறைத் தலைவராக இருக்க முடியும் என்று நினைத்த சிலராலும் தான் இத்தகைய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

tharsananth

இசைத்துறையில் நவீன தொழிநுட்பங்களைப் புகுத்தி அதை இசைப் போட்டி உலகத்துக்கு ஈடுகொடுக்கத்தக்கவகையில் பல்கலைக்கழகத்தில் இசைத்துறையை மாற்றியமைக்க முயன்றமையாலும், ஏனைய சில துறைசார் விரிவுரையாளர்களால் என்னால் ஏற்படுத்தப்பட்ட சவாலை சமாளிக்க முடியாத சந்தர்ப்பத்தில் என்னிடத்தில் குறைகூறுவதற்கு துறைசார் அறிவு போதாமையினாலும், படித்தவர் முதல் பாமரர் வரை இன்று செல்வாக்குச் செலுத்திக் கொண்டிருக்கும் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார்கள்.

நான் தான் இசைத்துறைத் தலைவராக வேண்டும் என்று இதே பல்கலைக்கழக வாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சில மாணவிகளிடத்து வெள்ளைத்தாளில் ஒப்பமிடும்படி கேட்ட போது அவர்கள் அதற்கு மறுக்க அப்படியாயின் உனக்கும் அந்த விரிவுரையாளர்களுக்கும் ஏதாவது தொடர்புகள் இருக்கின்றனவா? என மிரட்டி கட்டாயக் கையொப்பத்தை வாங்கி இருக்கின்றார்கள்.

அவ்வாறு கையொப்பமிட்ட மாணவிகளோ அல்லது என்னால் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள் என்று பல்கலைக்கழகம் எழுதிய கதையில் வருகின்ற மாணவிகளோ இதுவரையில் இது தொடர்பில் விசாரிப்பதற்காக அனுப்பப்பட்ட பெண் அதிகாரிகளிடம் எந்தவொரு ஏற்றுக் கொள்ளலையும் செய்யவில்லை.

மாறாக, இரகசியமான முறையில் தனக்கு இங்கிருக்கின்ற விரிவுரையாளர்களால் ஏதேனும் பாலியல் ரீதியான குற்றச் சாட்டுக்கள் இருப்பின் தனக்குத் தெரிவிக்கும் படி தனது கையடக்கத் தொலைபேசி இலக்கத்தினை கொடுத்துவிட்டுச் சென்ற போதிலும் கூட இதுவரை எந்த மாணவியும் சாட்சியம் கூறவில்லை. ஏதோ ஒரு ஓடியோ அதில் என் குரலாம்.

இது மாத்திரமே என் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு. ஆனால், நான் அவ்வாறு எந்த மாணவியுடனும் அத்துமீறிய கதையில் ஈடுபட்டதில்லை. நான் பரீட்சை முடிவுகளில் கைவைப்பதாக குற்றம்சாட்டி இருந்தார்கள். ஆனால், பரீட்சை முடிவுகள் எவையும் நானாக எடுப்பதில்லை. நவீன தொழிநுட்ப முடிவுகளின் அடிப்படையிலேயே பெறுபேறுகள் தீர்மானிக்கப்படுகின்றன என்பதனை என் மாணவ மாணவியர் அறிவர். என்று குறிப்பிட்டுள்ளார்

Related Posts