நாடுமுழுவதும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது போரட்டத்தைக் கைவிடவேண்டும் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ நேற்று மகஸின் சிறைக்கைதிகள் முன்னிலையில் விடுத்த கோரிக்கையை கைதிகள் ஏற்க மறுத்துள்ளனர்.
தமது விடுதலை தொடர்பில் ஜனாதிபதியிடமிருந்து ஒரு பதில் கிடைக்கும்வரை உண்ணாவிரதத்தைக் கைவிடப்போவதில்லை என உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவிடம் குறிப்பிட்டுள்ளனர்.
நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ நேற்று மகஸின் சிறைச்சாலைக்குச் சென்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும், தமிழ் அரசியல் கைதிகளைப் பார்வையிட்டுப் பேச்சு நடத்தினார்.
நாடுமுழுவதிலுமுள்ள 14 சிறைச்சாலைகளில் 217 தமிழ் அரசியல் கைதிகள், தம்மை விடுதலைசெய்யுமாறு அரசிடம் கோரிக்கை விடுத்து கடந்த திங்கட்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் வடக்கில் போராட்டங்களை நடத்தியதுடன், நேற்றுமுன்தினம் கொழும்பில் போராட்டம் நடத்தப்பட்டு, ஜனாதியிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இதனால், அரசியல் கைதிகள் விடுதலை விவகாரமானது தற்போது நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கொழும்பு – மகஸின் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் சிறைக் கைதிகளை நேற்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ பார்வையிட்டார்.
இதன்போது பெண்கள், சிறுவர் விவகார பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் சென்றிருந்தனர். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுடன் சுமார் ஒரு மணித்தியாலங்களாக இவர்கள் கலந்துரையாடினர்.
உண்ணாவிரதமிருக்கும் கைதிகளை விடுவிக்க இந்த வருட இறுதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ் அரசியல் கைதிகளிடம் வாக்குறுதியளித்த நீதி அமைச்சர் விஜயதாஸ, உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளார்.
இருப்பினும், அந்த வாக்குறுதியை ஏற்றுக்கொள்ள மறுத்த தமிழ் அரசியல் கைதிகள், நீதி அமைச்சரின் கோரிக்கையையும் ஏற்க மறுத்து உண்ணாவிரதத்தைத் தொடர தீர்மானித்துள்ளனர். இந்த விடயத்தை நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ஊடகங்களிடமும் குறிப்பிட்டார்.
இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் இவ்வருட இறுதிக்குள் முடிவொன்றைப் பெற்றுக்கெடுப்பதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தம்மிடம் வழங்கிய வாக்குறுதியை ஏற்றுக்கொள்ளமுடியாது எனக் கூறிய உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள், ஏனைய சிறைச்சாலையிலுள்ள கைதிகளுடன் பேச்சு நடத்திய பின்னரே முடிவைக் கூறமுடியும் என்று தெரிவித்தனர் என்று சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார்.
விடுதலை செய்வோம் என்ற உறுதிமொழி வழங்கப்படாததால், ஜனாதிபதியிடமிருந்து ஒரு பதில் கிடைக்கும்வரை உண்ணாவிரதத்தைக் கைவிடப்போவதில்லை அரசியல் கைதிகள் குறிப்பிட்டனர் என்று சுமந்திரன் எம்.பி. மேலும் தெரிவித்தார்.