கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை மேலும் இரு வாரங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றத்தினால் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை குற்றப்புலனாய்வுத் துறையினரால் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இலங்கையில் குற்றவியல் சட்டத்தின் கீழ் பொலிஸ் விசாரணைக்காக 72 மணித்தியாலங்களுக்கு மேல் ஒருவரை தடுத்து வைக்க முடியாது. 72 மணி நேரத்துக்கு மேல் தடுத்து வைத்து விசாரணை செய்வதாயின் நீதிமன்ற அனுமதி பெற வேண்டும்.
இதன் பிரகாரம் கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வு துறையினரால் இன்று புதன்கிழமை முன்வைக்கப்பட்ட அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், எதிர்வரும் 4ம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதியளித்துள்ளது.