தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் டோணியின் அசத்தலான ஆட்டத்தால் 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்து உள்ளது.
டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்த இந்தியா, அடுத்ததாக ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டுவருகிறது.
கான்பூரில் நடந்த முதல் போட்டியில், 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்ற நிலையில் இந்தூரில் 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
கடும் நெருக்கடியிலுள்ள இந்திய அணி நேற்றய போட்டியில்தென் ஆப்பிரிக்காவை வென்றே தீர வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.
இப்போட்டியில் அஸ்வின் ஆடாத நிலையில் ஹர்பஜன் சிங் அணியில் சேர்க்கப்பட்டார். அமித் மிஸ்ரா மற்றும் ஸ்டூவர்ட் பின்னிக்கு பதிலாக, அக்ஸர் பட்டேலும், மோகித் ஷர்மாவும் சேர்க்கப்பட்டனர்.
அதேநேரம், தென் ஆப்பிரிக்க அணி மாற்றமின்றி களமிறங்கியது. ரோகித் ஷர்மாவும், தவானும் தொடக்க வீரர்களாக களம் கண்டனர்.
டாசில் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. கடந்த போட்டியில் 150 ரன்கள் விளாசிய ரோகித் இப்போட்டியில் 3 ரன்களில், ரபடா பந்து வீச்சில், பௌல்ட் ஆகி வெளியேறினார். தவானும் 23 ரன்கள் மட்டுமே எடுத்து மோர்க்கல் பந்தில் டுமினியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
மூன்றாவது வரிசையில் களமிறங்கிய ரஹானே பொறுப்பாக ஆடிய நிலையில், 12 ரன்களில் கோஹ்லி மோசமான ஒரு ரன் அவுட்டுக்கு பலியானார்.
3 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்களில் போராடிக்கொண்டிருந்தது இந்தியா. அப்போது, ரஹானேவுடன் டோணி ஜோடி சேர்ந்தார். இருப்பினும் ரஹானே 51 ரன்களிலும் அடுத்து வந்த ரெய்னா டக் அவுட்டும் ஆக, 104 ரன்களிலேயே, இந்தியா பாதி அணியை இழந்தது.அப்போது 24 ஓவர்கள்தான் ஆகியிருந்தது.
எனவே 40 ஓவரை இந்தியா ஆடுமா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு ஏற்பட்டது. இருப்பினும் தனி ஆளாக டோணி போராடி அரை சதம் கடந்தார். புவனேஸ்வர் குமார் 14 ரன்களும், ஹர்பஜன்சிங் 22 ரன்களும் விளாச 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி, 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 247 ரன்களை எடுத்தது.
தென் ஆப்பிரிக்கா வெல்ல 248 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி. டோணி அதிகபட்சமாக 92 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
தென் ஆப்பிரிக்க தரப்பில் ஸ்டைன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், மோர்க்கல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியிருந்த டோணி, இன்றைய பொறுப்பான ஆட்டத்தால் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.
அணியின் பிற வீரர்கள் பங்களிப்புதான் சரியில்லை என்பதை தனது ஆட்டத்தின் மூலம் அம்பலப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. அந்த அணியின் அம்லா 17 ரன்களிலும், டி காக் 34 ரன்களிலும், டு பிளிஸ்சிஸ் 51 ரன்களிலும், டுமினி 36 ரன்களிலும், மில்லர் ரன்எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.
26.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை மட்டுமே எட்டியிருந்தது தென் ஆப்பிரிக்கா. எங்கே வெளுத்து வாங்குவாரோ என அச்சப்படவைத்த டிவில்லியர்ஸ் 19 ரன்கள் எடுத்த நிலையில் 6வது விக்கெட்டாக வீழ்ந்த போது இந்திய அணி பெருமூச்சுவிட்டது.
அதன் பின்னர் களத்தில் நின்ற தென் ஆப்பிரிக்க வீரர்களால் நிலைத்து நின்று கணிசமான ரன்களை குவிக்க முடியாமல் போனது.
பெஹர்டைன் 18 ரன்களிலும், ஸ்டெயின் 13 ரன்களிலும், தாகீர் 9 ரன்களிலும், மோர்கல் 4 ரன்களிலும் அவுட் ஆகினர். 43.4 ஓவரில் 225 ரன்களை எட்டிய நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் தென் ஆப்பிரிக்கா இழந்தது.
இதனால் இந்தியா 22 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி பழிதீர்த்தது. இந்திய அணியில் அக்சர் படேல், புவனேஷ்குமார் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்து உள்ளது.
ஆட்டத்தின் சிறப்பாட்டக்காரராக இந்திய அணித்தலைவர் டோணி தெரிவு செய்யப்பட்டார்.