வடக்கு கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்து நாட்டின் ஏனைய பகுதிகளிலும், புலம் பெயர்ந்து உலகின் பல நாடுகளிலும் வாழுகின்ற தமிழ் மக்களும் வாக்களிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அன்மையில் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவம் செய்யும் சிறு பான்மைக் கட்சிகளின் பிரதிநிதிகளை தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய இராஜகிரியவில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் கலந்து கொண்டிருந்த செயலாளர் நாயகம் அவர்கள், அசாதாரண சூழ்நிலை காரணமாக வடக்கு கிழக்கிலிருந்து வெளியேறி நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழ்கின்ற தமிழ்;, முஸ்லிம் மக்களும், தமிழ் நாட்டில் அகதிளாக வாழும் இலங்கைத் தமிழர்கள் சுமார் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டோருக்கும், உலகின் ஏனைய நாடுகளில் வாழ்கின்ற பல லட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களுக்கும் வாக்களிக்கும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
புலம்பெயர்ந்து வாழும் வடக்கு கிழக்கு மக்களை, எமது நாட்டில் முதலீடுகளைச் செய்ய வருமாறு ஜனாதிபதியும் பிரதமரும் அழைப்பு விடுத்துள்ளனர். அது வரவேற்புக்குரியதாகும். அதேபோல் அவர்கள் இரட்டை பிரஜா உரிமையின் அடிப்படையில் அல்லது அவர்கள் வாழும் நாடுகளிலுள்ள எமது தூதுவராலயங்களுக்கூடாகவேனும் வாக்களிப்பில் கலந்து கொள்ள விசேட செயற்பாடு அவசியமாகும் என்றும் கோரிக்கைவிடுத்ததோடு, இதுபோன்ற ஏற்பாடுகள் அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் இருக்கின்றன என்பதையும் சுட்டிக் காட்டினார்.
இந்தச் சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவரும் அமைச்சருமான ரவுப் கக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் அதன் தலைவரும் அமைச்சருமான ரிசாட் பதியூதீன், உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.