இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையிலான ஆரம்பகால அமைதி நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்து வந்த இந்தியா, போரின் இறுதித் தருணங்களில் இலங்கை இராணுவம் வெற்றியடையும் வாய்ப்பு அதிகரித்தவுடன் விடுதலைப்புலிகளின் அழிவை எதிர்பார்த்துகாத்திருந்ததாக தெரிவித்துள்ள இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்யஹய்ம், புலிகளுக்காக இந்திய அரசு ஒரு சொட்டு கண்ணீர்கூட சிந்த வில்லை எனக் குறிப்பிட்டார்.
தென்னிந்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அச் செவ்வியில் இலங்கை தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,
கேள்வி :- சமீபத்தில் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில் :- இது இலங்கைக்கு சாதகமான நடவடிக்கை என நான் நம்புகிறேன. அந்த தீர்மானத்தை அவர்கள் நிறைவேற்ற வேண்டியது அவசியம். ஏனென்றால் இதற்கு முன்பு அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் தீர்மானங்கள் சரிவர தமது கடமையை நிறை வேற்றததால் மக்களிடையே அவநம்பிக்கை உள்ளது. இது இப்போது நிறைவேற்றப்பட்டதால் ஆக்கபூர்வமான மாற்றமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும்.
கேள்வி :- இந்தத் தீர்மானம் இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வருமா? அவர்களுக்கு நீதி கிடைக்குமா?
பதில் :- இந்தத் தீர்மானம் மட்டும் இலங்கையின் எல்லாப் பிரச்சனைகளையும் தீர்த்துவிடமுடியாது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்னொரு பக்கம் பொருளாதார மற்றும் சமுக மேம்பாட்டுக்கான தேவகைளையும் கவனிக்க வேண்டும்.
கேள்வி :- தற்போது, நல்லினக்கம் மற்றும் அமைதி மட்டுமே முன்னிலைப் படுத்தப்படுகிறது. அதே நேரத்தில், இலங்கையில் நடத்தப் போர்க்குற்றங்களுக்கு யார் பொறுப்பேற்பது?
பதில் :- போர்க்குற்றங்களுக்கு இரண்டு தரப்பினர் முக்கயமாகப் பொறுப்பேற்க வேண்டும். ஒன்று ராஜபக்ஷ அரசாங்கம் இந்தப் பிரச்சினையை இராணுவ ரீதியா கையாண்டதற்கு அவர்கள் தான் காரணம்.
இன்னொரு தரப்பு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தற்போது, பிரபாகரனும் மற்ற பெரும்பாலான விடுதலைப்புலி தலைவர்களும் இறந்துவிட்டார்கள் எனினும் போர்க்குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச மனித உரிமை சமூகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
கேள்வி :- போர் நேரத்தில் இந்தியாவின் பங்களிப்பை எப்படிப் பாக்கிறீர்கள்?
பதில் :- போர் முடிவதற்கு பல மாதங்கள் முன்புவரை இராணுவ ரீதியான வெற்றி சாத்தியம் இல்லை என்று இந்தியா நம்பியிருந்தது. அதனால் அமைதி நடவடிக்கைகளுக்கு பலமான ஆதரவை அளித்தது.
பின்னர் ஏற்பட்ட இறுதிப்போரின் கடைசி சில மாதங்கள் இலங்கை அரசு வெற்றிபெறும் என்று இந்தியா எதிர்பார்த்தது. அதனால் அமைதிக்கான அதன் ஆதரவுகளில் மாற்றம் ஏற்பட தொடங்கியது. இதனால் விடு தலைப்புலிகளுக்கும் இந்தியாவுக்குமான உறவுகள் பலம் இழந்து போனது.
போர் உக்கிரமடைந்த நிலையிலும் அவர்களது விழிகளில் புலிகளுக்காக கண்ணீர்வரவில்லை. மாறாக விடுதலைப்புலிகளின் அழிவை இந்தியா முன்னதாகவே ஊகித்து வைத்திருந்தது.
கேள்வி :- சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்த வேண்டும் என இந்திய அரசை வழியுறுத்தி தமிழக சட்டப்பேரவை தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் இந்திய அரசு அவ்வாறு செய்யவில்லை. ஏழு கோடி தமிழர்களின் உணர்வுகளை புறக் கணிப்பது சரியான நடவடிக் கையா?
பதில் :- இந்தியாவின் உள் நாட்டு அரசியல் விவகாரங்களில் நான் தலையிட விரும்பவில்லை. அதேநேரத்தில் வெளியிலிருந்து பார்க்கும் போது முதல்வர் ஜெயலலிதா மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவருமே கூட்டாச்சி முறையில் இலங்கைப் பிரச்சினையில் தீர்வு காண தங்களுக்குரிய வழிகளில் ஆக்கபூர்வமாக ஊக்குவிக்கிறார்கள் என நினைக்கிறேன் என்றார் எரிக் சொல்ஹெய்ம்.