நாடாளுமன்ற உறுப்பினர்கள் படுகொலைசெய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நாடாளுமன்ற விசாரணைக்குழுவொன்றை அமைப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் அதிகாரம் மற்றும் விசேட வரப்பிரசாதங்கள் சட்டமூலத்தின்கீழ் இந்தக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
எம்.பிக்களின் படுகொலைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸ் உத்தியோகத்தர்களை நாடாளுமன்ற விசாரணைக்குழு முன்னிலையில் அழைத்து தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும், பொலிஸாரின் விசாரணைகளை மேற்பார்வையிடவும் இந்த விசாரணைக் குழுவுக்கு அதிகாரமளிக்கப்படவுள்ளது.
இந்த விசாரணைக்குழுவின் விசாரணை அறிக்கை நீதிமன்றத்திலும் சமர்ப்பிக்கப்படவுள்ளது. தியாகராஜா மகேஸ்வரன், நடராஜா ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம், தி.மு.தஸநாயக்க, ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உள்ளிட்ட எம்.பிக்கள் தமது பதவிக் காலத்தின்போது படுகொலைசெய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.