காடழிப்பை ஜனாதிபதியால் கூட தடுக்க முடியாத துர்ப்பாக்கிய நிலை வவுனியா, மன்னார், முல்லைத்தீவில் காணப்படுவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் முல்லைத்தீவு, கொத்தம்பியாகும்பம் என்ற இடத்தில் காடுகள் அழிக்கப்பட்டு முஸ்லீம் மக்கள் குடியேற்றப்படுவதாக எழுந்துள்ள சர்ச்சையை தொடர்ந்து அவ்விடத்திற்கு சென்று பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறினார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,
முல்லைத்தீவு அரசாங்க அதிபருக்கு தெரியாமல் பிரதேச செயலாளாரின் அனுமதி இல்லாமல் முல்லைத்தீவில் சில இடங்களில் மீள் குடியேற்றங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. 77 முஸ்லீம் குடும்பங்கள் வசித்ததாக சொல்லப்படுகின்ற கொத்தம்பியாகும்பம் என்ற இடத்தில் பல நூற்றுக்கணக்கான பல கோடி பெறுமதியான தேக்கமரங்கள் அழிக்கப்பட்டுள்ளது. அம் மரங்களுக்கு என்ன நடந்தது என்று யாருக்குமே தெரியாது. அங்கு இடம்பெறும் குடியேற்றம் அரசாங்க அதிபருக்கு கூட தெரியாதுள்ளமை நாங்கள் அரசாங்க அதிபருடன் கலந்துரையாடியதில் இருந்து தெரியவருகின்றது.
இந்த மாவட்டத்தில் முஸ்லீம் மக்கள் தமக்கு சொந்தமான இடத்தில் மீள்க்குடியேறுவதில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. ஆனால் மாவட்டத்தின் அரச அதிகாரிகளுக்கு தெரியாமல் காடுகளை அழித்து மீள்குடியேற்றம் செய்யப்படகின்றமை பல முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் முல்லைத்தீவில் மீள்குடியேறும் முஸ்லிம்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு தொல்லைகளை கொடுத்து வருவதாக அங்குள்ள பிரதேச மக்கள் பிரதேச முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.