இலங்கையில் சிறார்கள் மத்தியில் சுத்தம்- சுகாதாரப் பழக்க வழக்கங்களை ஊக்குவிக்கும் யுனிசெஃப் அமைப்பின் வேலைத்திட்டத்திற்காக இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் இலங்கை வந்துள்ளார்.
யுனிசெஃப் நிறுவனத்தின் பிராந்திய நல்லெண்ணத் தூதுவரான சச்சின் டெண்டுல்கருடன் இலங்கையின் கிரிக்கெட் நட்சத்திரம் முத்தையா முரளிதரனும் இந்தப் பணிக்காக கைகோர்த்துள்ளார்.
பள்ளிக்கூடங்களில் சிறார்களிடத்தில் சுத்தம்- சுகாதார பழக்கவழக்கங்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தை முன்னிட்டு கொழும்பில் நேற்று நடந்த நிகழ்வில்இரண்டு கிரிக்கெட் நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர்.
இங்கு பேசிய சச்சின் டெண்டுல்கர், வயிற்றுப்போக்கு போன்ற நோய்களால் தினமும் பெருமளவிலான சிறார்கள் உயிரிழக்கிறார்கள் என்ற செய்தி கவலையைத் தருவதாகக் கூறினார்.
‘இந்த 2015ம் ஆண்டில், நாள் ஒன்றுக்கு ஆயிரத்து 600 சிறார்கள் வயிற்றுப்போக்கு போன்ற நோய்களால் உயிரிழக்கிறார்கள் என்று எனக்கு சொல்லப்பட்ட செய்தி மிகவும் கவலையை தருகிறது.இதை முடிவுக்கு கொண்டுவருவதற்காக நாம் எல்லோரும் ஒன்றுசேர வேண்டும்’ என்றார் சச்சின் டெண்டுல்கர்.
தெற்காசியாவில் 61 கோடிப் பேருக்கு கழிப்பறை வசதிகள் கிடையாது என்றும் இலங்கையில் 14 வீதமான குடியிருப்புகளும் 17 வீதமான பள்ளிக்கூடங்களும் கழிப்பறை வசதிகள் இல்லாத நிலையில் இருப்பதாக யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
விளையாட்டு நட்சத்திரங்களின் மூலம் சிறார்களிடம் நல்ல செய்தியை கொண்டுசெல்ல முடியும் என்ற நம்பிக்கையிலேயே யுனிசெப் சச்சின் டெண்டுல்கர் மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோரை இந்தப் பணியில் இணைத்துக்கொண்டுள்ளதாக யுனிசெஃப் நிறுவனத்தின் இலங்கை நீர்-சுகாதாரப் பிரிவு அதிகாரியான ராதிகா சிவகுமாரன் கூறினார்.
இலங்கையில் சிறார்கள் மத்தியில் சுத்தம்-சுகாதாரப் பழக்கவழக்கங்கள் உரிய முறையில் பேணப்படாத காரணத்தினால் குடல் புழு நோய்கள், ரத்தசோகை, நெருப்புக் காய்ச்சல், வளர்ச்சிக் குன்றுதல் உள்ளிட்ட நோய்களால் சிறார்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சமுதாய மருத்துவத்துறையின் முன்னாள் விரிவுரையாளர் செ.சு. நச்சினார்க்கினியன் தெரிவித்தார்.