விடுதலைப் புலிகள் அரசியல் ரீதியில் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்வதற்காகவே போராடினார்கள். அவர்களுக்கு உதவி செய்தவர்கள் கைது செய்யப்பட்டால், அவர்களும் அரசியல் கைதிகள் என்ற வகைக்குள்ளேயே உள்ளடங்குவார்கள் என்று, வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
இலங்கையிலுள்ள சிறைகளில், அரசியல் கைதிகள் எவரும் இல்லையென நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கூறிய கருத்துக்கு தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
‘விடுதலைப்புலிகளுக்கு உதவி செய்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களும் அரசியல் கைதிகளாவர். அவ்வாறு இருக்கையில், சிறையில் உள்ளவர்கள் அரசியல் கைதிகள் இல்லை என்று கூறமுடியாது’ என்று அவர் கூறினார்.
மேலும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள அவர், மனிதாபிமான அடிப்படையில் அவர்களை விடுவிக்க இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.