கஸ்டப் பிரதேசத்தில் கடமையாற்ற வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 6 வருடங்களாக கடமையாற்றிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் தங்களுக்கான இடமாற்றத்தை வழங்குமாறு கோரி, வடமாகாண கல்வி அமைச்சின் முன்பாக திங்கட்கிழமை (12) போராட்டம் மேற்கொண்டனர்.
2009ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் நியமனம் பெற்று கடமையாற்றிய இவர்கள், 5 வருடங்கள் என்ற கட்டாயக் கால எல்லையைத் தாண்டியும் அங்கு பணியாற்றி வருகின்றனர்.
தங்களுக்கான இடமாற்றம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் ஒரு வருடம் அங்கு கடமையாற்றுமாறு கடந்த செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி வடமாகாண கல்வி அமைச்சால் தங்களுக்கு வழங்கப்பட்ட கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாகவும் ஆசிரியர்கள் கூறினர்.
முல்லைத்தீவில் கடமையாற்றிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 55 ஆசிரியர்கள் இடமாற்றத்துக்காக விண்ணப்பித்த நிலையில் அவர்களில் 22 பேருக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. மிகுதி 33 ஆசிரியர்களும் பாட ரீதியான பற்றாக்குறை காரணமாக தொடர்ந்தும் ஒரு வருடங்கள் முல்லைத்தீவில் கடமையாற்றுமாறு கூறப்படுவதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறினர்.
தங்களுக்கான இடமாற்றத்தை இவ்வருடமே வழங்குமாறு கோரி ஆசிரியர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.