தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி கொழும்பில் நாளை புதன்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதேபோன்று, யாழ்ப்பாணத்திலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக அரசியல் கைதிகளின் உறவினர்களாலேயே இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
பொதுமன்னிப்பு வழங்கி தம்மை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை தமிழ் அரசியல் கைதிகள் நேற்று முதல் முன்னெடுத்துள்ளனர்.
நாடு முழுவதிலும் உள்ள 14 சிறைச்சாலைகளிலும் உள்ள 217 அரசியல் கைதிகள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு ஆதரவாக, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்துவதற்காக அரசியல் கைதிகளின் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
கொழும்பு கோட்டையில் நாளை புதன்கிழமை மாலை முதலாவது கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது. இதன் தொடர்ச்சியாக, வடக்கு, கிழக்கில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 16ஆம் திகதி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.