மாவட்ட ரீதியிலான புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள்

யாழ்ப்பாண மாவட்டம்

2015 ஆம் ஆண்டிற்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில், யாழ். சென் ஜோன் பொஸ்கோ வித்தியாலய மாணவர் சோதிநாதன் வசீகரன் 192 புள்ளிகள் பெற்று யாழ். மாவட்ட ரீதியாக முதலிடத்தினை பெற்றுள்ளார்.

சோதிநாதன் வசீகரன்
சோதிநாதன் வசீகரன்

யாழ். சென் ஜோன் பொஸ்கோ வித்தியாலய மாணவர்களான கனகராஜ் கவிலக்ஷன் 188 புள்ளிகளைப் பெற்று யாழ் மாவட்ட மட்டத்தில் 05 ஆம் இடத்திலும், சிறிஸ்கந்தராஜா கஜலக்ஷன் 186 புள்ளிகளைப் பெற்று யாழ் மாவட்ட மட்டத்தில் 09 ஆம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.

2015 ஆம் ஆண்டிற்கான தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ். சென் ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் இருந்து 227 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.

அம்மாணவர்களில் 133 பேர் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் மாவட்டம்
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின் பிரகாரம் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மன்னார் மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

குறித்த பாடசாலையைச் சேர்ந்த 02 மாணவர்கள் முதலாம் இடத்தையும், மேலும் ஒரு மாணவன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

குறித்த பாடசாலையைச் சேர்ந்த ஐ.எரிக்கிறேஸ்மன் 183 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தை பெற்றுள்ளதோடு அதே பாடசாலையைச் சேர்ந்த ஜே.ரெற்றஸ் அனோன் 183 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

அதேவேளை குறித்த பாடசாலையைச் சேர்ந்த என்.அபிசேக் 182 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்தை பெற்றுள்ளனர்.

வவுனியா மாவட்டம்

புலமைப்பரிசில் பரீட்சையில் 188 புள்ளிகளை பெற்று இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி வவுனியா மாவட்டத்தில் முதலாமிடத்தினை பெற்றுள்ளார்.

பெறுபேறுகளின் அடிப்படையில் மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினை 188 புள்ளிகளை பெற்று கரிணி பரந்தாமனும்,இரண்டாமிடத்தினை 187 புள்ளிகளை பெற்று அமல்ராஜ் மதுரனும், 186 புள்ளிகளை பெற்று கர்னி சுரேஸ் மூன்றாமிடத்தினையும் 185 புள்ளிகளை பெற்று லிங்கநாதன் அகர்சன் நான்காம் இடத்தினையும் 182 புள்ளிகளை பெற்று யேசுநேசன் சதுர்சிகன் ஏழாமிடத்தினையும் அதேபுள்ளிகளை பெற்று பிரணவி சஞ்சீபனும் ஏழாமிடத்தினையும் 181 புள்ளிகளை பெற்று பரமானந்தம் நிகேசன் ஒன்பதாம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.

இதேவேளை இப் பாடசாலையில் பரீட்சையில் தோற்றிய 166 பேரில் 76 பேர் சித்தியடைந்துள்ளனர்.

இந்தநிலையில் கடந்த வருடம் இப் பாடசாலையில் தோற்றிய மாணவனே வடமாகாண ரீதியில் முதலாமிடத்தினை பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

அம்பாறை மாவட்டம்

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தில் முதலாமிடத்தினை கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் மாணவன் மதுரா கிருஸ்ணசைதன்னியன் 189 புள்ளிகளைப்பெற்று முதலிடத்தினை பெற்றுள்ளார்.

கல்முனை வலயத்தில் அதிகூடிய மாணவர்களை பெற்ற பாடசாலையாகவும் மாவட்டத்தில் முதலாம் இடத்தை இப்பாடசாலை பெற்றுக்கொண்டதுடன் 55 மாணவர்களை இம்முறை வெட்டுப்புள்ளிகளுக்கு மேலாக பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட மட்டத்திலான அனுமதி புள்ளி விபரம்

2015ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் மாவட்ட மட்டத்திலான தேசியப் பாடசாலை அனுமதி புள்ளிகளும் வெளியாகியுள்ளன.

இதன்படி கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, குருநாகல், கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு-154 புள்ளிகளும், யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, பதுளை, ஆகிய மாவட்டங்களுக்கு 153 புள்ளிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, அம்பாறை, அநுரதபுரம், பொலநறுவை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு 152 புள்ளிகளும், நுவரெலியா, திருகோணமலை, புத்தளம், மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு 151 புள்ளிகளும், ஹம்பாந்தோட்டைக்கு 150 புள்ளிகளும் அனுமதிப்புள்ளிகளாக வழங்கப்பட்டுள்ளன.

Related Posts