யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் மருந்தகங்களில் பணியாற்றுவதற்கு மருந்தாளர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், மருந்தகங்களை கொண்டு நடத்துவதற்கு, மருந்தக உரிமையாளர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றன.
இலங்கையில் சுமார் 30 ஆயிரம் மருந்தகங்கள் இருக்கின்றபோதும், பதிவு செய்யப்பட்ட மருந்தாளர்கள் என சுமார் 7 ஆயிரம் பேர் மாத்திரமே காணப்படுகின்றனர். மருந்தாளர்கள் கற்கைநெறிகளை பூர்த்தி செய்பவர்கள் மருந்தகங்களில் பணியாற்றுவதற்கு முன்வருவதில்லை. மாறாக அரச வேலையை எதிர்பார்க்கின்றனர்.
தனியார் மருந்தகங்களில் மருந்தாளர்கள் இல்லாத காரணத்தால், மருந்தக உரிமையாளர்கள், தங்கள் மருந்தகங்களை கொண்டு நடத்த முடியாமல் இருக்கின்றனர்.
யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால், மருந்தாளர்களை நியமிக்குமாறு தங்களுக்கு அறிவுறுத்தப்படுவதாகவும் ஆனால் மருந்தாளர்களைப் பெற்றுக்கொள்வது மிகக்கடினமாகவுள்ளதாகவும் மருந்தக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முழு நாட்டிலும் உள்ள மருந்தாளர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம், அகில இலங்கை மருத்துவச் சங்கம் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.