ஒரு குழந்தையைப் பெறுமதியுள்ள மனிதனாக ஆசிரியரால் மாற்ற முடியும்! -ஜனாதிபதி

“ஒரு தாய் பெற்றெடுக்கும் குழந்தையை உண்மையான மனிதனாக்க ஒரு ஆசிரியரால் முடியும். அதேவேளை அந்தக் குழந்தையை தத்துவவாதியாக, அறிஞராக, கலைஞனாக, அரசியல்வாதியாக, மக்கள் தலைவனாக ஆக்குவதற்கான இடமாக இருப்பது பாடசாலையாகும்.” – இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

“மாணவர்களை அறிவுள்ளவர்களாக, ஒழுக்கமுள்ளவர்களாக, திறமையான சிந்தனைகளைக் கொண்டவர்களாக ஆக்கும் பிரதானமான பொறுப்பு ஆசிரியர்களுடையது.

ஆசிரியப் பணியானது ஆனது தொழில் என்பதையும் தாண்டி சமூகத்திற்குப் பொறுப்பானவர்களை உருவாக்கும் உன்னத பணியாக காணப்படுவதாலேயே ஆசிரியர்கள் சமூகத்தில் மிகவும் மதிக்கப்படுபவர்களாக இருக்கின்றார்கள்” – என்றும் ஜனாதிபதி கூறினார்.

உலக ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு கல்வி அமைச்சு பண்டாராக்க ஞாபகார்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த ‘குரு பிரதீப பிரபா – 2015’ நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஆசிரியர்கள் மாணவர்களது திறமைகள் மற்றும் அறிவினை வளர்ப்பதனூடாக மாணவர்களது வாழ்கையில் அவர்களை வெற்றிபெறச் செய்ய வைப்பதுடன் மட்டும் நின்றுவிடாது அவர்களை சிறந்த பண்புகளைக் கொண்ட மனிதனாக மாற்றுவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும் எனவும் ஜனாதிபதி இதன்போது கூறினார்.

அத்தோடு அப்பாவிக் குழந்தைகள் சமூகம்விடும் தவறுகள் காரணமாக பாதிக்கப்பட்டவர்களாக மாறுவதையும் ஞாபகத்தில் கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஒவ்வொரு ஆசிரியர்களும் சமூகத்தில் பொறுப்பு மிக்கவர்களாக வேண்டிய அதேவேளையில் வகுப்பறைகளிலும் தங்களுடைய பொறுப்புமிக்க கடமைகளை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். சிறுவர்களுக்கு வகுப்பறைகளினூடாக கற்பித்தலை வழங்கும் அதேவேளை சமூகத்தினை எவ்வாறு எதிர்கொள்வது தொடர்பாகவும் வழிகாட்டவேண்டிய நேரம் இதுவென்றும் அவர் குறிப்பிட்டார்.

பாடசாலை நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பாக பெரியவர்களை வழிகாட்டும் தேசிய வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதன் அவசியம் தொடர்பாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இவ்விரிவான வேலைத்திட்டமானது கல்வியமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் மேலும் தெரிவித்தார்.

அதிபர்கள், ஆசிரியர்கள், பிரிவேனாக்களுடைய தலைவர்கள், பிரிவேனாக்களுடைய விரிவுரையாளர்கள் மற்றும் தேவாலையங்களுடைய அருட்சகோதரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related Posts