இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில் கலப்பு (ஹைபிரிட்) நீதிமன்றம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அதற்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று சபைக்குள் போராட்டம் நடத்தினர்.
இதற்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். இதனால் சபைக்குள் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதுடன், மோதல் நிலையும் உருவாகியது.
இதையடுத்து, சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்க ஒத்திவைத்தார் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால. நாடாளுமன்றம் நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, 23/2 நிலையியல் கட்டளைச்சட்டத்தின்கீழான விசேட கூற்று ஆகியன முடிவடைந்த பின்னர் சட்டப்பிரச்சினையயான்றை எழுப்பி சர்ச்சைக்கு பிள்ளையார் சுழி போட்டார் விமல் வீரவன்ஸ எம்.பி. சட்டப் பிரச்சினையின்போது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் அவர் மிகவும் ஆக்ரோமான முறையில் கருத்து வெளியிட்டார்.
“ஜெனிவா தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில் கலப்பு நீதிமன்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படவேண்டும் என நான் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தேன்.
ஆனால், அதற்குரிய திகதி இன்னும் ஒதுக்கப்படவில்லை. இவ்வாரத்துக்குரிய நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலிலும் விவாதத்துக்குரிய திகதி வழங்கப்படவில்லை. இது பாரிய பிரச்சினையாகும். இன்று இராணுவ முகாமுக்குள் நுழைந்து பொலிஸார் விசாரணை நடத்துகின்றனர்.
இராணுவத்தினரை எம்மால் பலிகொடுக்க முடியாது” என்று விமல் வீரவன்ஸ எம்.பி. சுட்டிக்காட்டினார். இவ்வாறு விமல் வீரவன்ஸ உரையாற்றிக்கொண்டிருக்கையில் அவரது கட்சியைச் சேர்ந்த நான்கு எம்.பிக்கள் திடீரென சபைக்குள் பெனரொன்றை (பதாகை) விரித்து கோஷம் எழுப்பத் தொடங்கினர்.
‘இராணுவத்தைப் பலியெடுக்கும் கலப்பு யுத்தக்குற்ற விசாரணை வேண்டாம்’ என்று அந்த பெனரில் எழுதப்பட்டிருந்தது. இவர்களுக்க சார்பாக உதய கம்மன்பில எம்.பியும் இறங்கினார். ரஞ்சித் சொய்ஷா எம்.பி. உள்ளிட்ட சில சு.க. எம்.பிக்களும் விமல் அணிக்கு சார்பாக சபைக்குள் முழக்கமிட்டனர்.
விமல் அணியினரின் இந்த நடவடிக்கையால் ஆளுங்கட்சி உறுப்பினர்களும் கடுப்பாகினர். கதிரையிலிருந்து எழுந்து நின்று கூக்குரலிட்டனர்; கண்டனம் தெரிவித்தனர். மறுபுறத்திலிருந்தும் சொற்கள் தொடுக்கப்பட்டன. இதனால் பெரும் சொற்போர் மூண்டது. நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக அனைவரையும் அமைதி காக்குமாறு பிரதி சபாநாயகர் கோரிக்கை விடுத்தார். ஆனால், இரு தரப்பும் சொற்போரை நிறுத்தவில்லை.
மீண்டும் மீண்டும் பிரதி சபாநாயகர் கோரிக்கை விடுத்தார். அதற்கு செவிசாய்க்கப்படவில்லை. லக்ஷ்மன் கிரியெல்ல, சுஜீவ சேரசிங்க, நளின் பண்டார, பாலித தெவரப்பெரும உள்ளிட்ட ஆளுங்கட்சி உறுப்பினர்கள் விமல் அணிகளுக்கு பதிலடி கொடுத்துக்கொண்டிருக்கும்போது விமல் அணியினர் திடீரென சபையின் நடுப்பகுதிக்கு வந்தனர். பதாகை சகிதம் விமல் அணியினர் சபையின் மையப்பகுதிக்கு வந்ததையடுத்து, உதய கம்மன்பில எம்.பியும் ஓடோடி வந்து அவர்களுடன் இணைந்துகொண்டார்.
இதையடுத்து, ஆளுங்கட்சி எம்.பிக்களும் மையப்பகுதிக்கு வரத் தொடங்கினர் படைக்கள சேவிதரும், நாடாளுமன்ற உதவியாளர்களும் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு முயற்சித்தனர். விமல் அணியினர் ஏந்தியிருந்த பதாகையை நளின் பண்டார எம்.பியும், பாலித்த தெவரப்பெரும எம்.பியும் பறிக்க முற்பட்டதால் மோதல் நிலை உருவாகியது.
எனினும், அவ்விடத்துக்கு வந்த மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி. இருதரப்பினரையும் சமரசப்படுத்தும் முயற்சியில் இறங்கினார். ஆனால், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. இதனால் பிற்பகல் 1.35 மணியளவில் சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்கள் ஒத்திவைத்தார் பிரதி சபாநாயகர். இந்தச் சர்ச்சை ஆரம்பமாகும்போது சபைக்குள் இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்ச்சை உக்கிரமடையும்போது சபைக்குள் இருக்கவில்லை.
அங்கிருந்து அவர் வெளியேறிவிட்டார்.” மீண்டும் 1.45 மணியளவில் சபை கூடியது. அதன்பின்னர் சபை நடவடிக்கைகள் அமைதியான முறையில் நடைபெற்றன.